தஞ்சாவூர்:தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் இராமசாமி தகோயில், தஞ்சையை ஆண்ட ரெகுநாத நாயக்க மன்னரால் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்ட மிகப் பழமையான வைணவத் கோயிலாகும். இங்கு மூலவர் இராமபிரான் பட்டாபிஷேக கோலத்தில் சீதா தேவியுடன் காட்சியளிக்கிறார்.
இராமபிரான் சீதாதேவியுடன் அமர்ந்திருக்க, சத்ருக்கனன் சாமரம் வீச, லட்சுமணன் தன்னுடைய மற்றும் அண்ணன் இராமனுடைய வில்லினையும் ஏந்தியிருக்க, பரதன் குடை சமர்ப்பிக்க, வேறு எங்கும் காண முடியாத வகையில் அனுமன் ஒரு கையில் வீணையும், மறு கையில் இராமாயண சுவடியும் ஏந்திய படி காட்சியளிக்கிறார். மேலும் இக்கோயிலின் உட்பிரகாரத்தினை மும்முறை வலம் வந்தால் இராமாயண கதையினை காட்சி வடிவில் வண்ண வண்ண ஓவியமாக காணலாம்.
இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோயிலில், ஆண்டுதோறும் ராமநவமி விழா 10 நாட்களுக்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு ராமநவமி விழா கடந்த 9 ஆம் தேதி செவ்வாய்கிழமை கருடாழ்வார் உருவம் பொறிக்கபட்ட கொடி தங்க கொடிமரத்தில் ஏற்றி வைக்க, ராமநவமி விழா தொடங்கியது. அதனையடுத்து, நாள்தோறும் அனுமந்த வாகனம், இந்திர விமானம், சூரியபிரபை, சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் என பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.