தை அமாவாசையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் குவிந்த மக்கள் திருச்சி: அமாவாசை நாட்களில் முன்னோர்களை வணங்கி ஆராதனைகள் செய்வது வழக்கம். மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து பூஜை செய்யலாம். ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் புனித நீர்நிலைகளில் பித்ருகளுக்கு தர்ப்பணம் கொடுத்து, தங்களது முன்னோர்களை வழிபடுவது மக்களின் வழக்கம். அதில் தை அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது.
மற்ற அமாவாசையில் தர்ப்பணம் செய்ய இயலாதவர்கள், தை அமாவாசையில் செய்தால் வருடம் முழுக்க முன்னோர்களுக்கு விரதம் இருந்து படையல் வைத்தற்கு சமம் என்பது நம்பிக்கை. அதன் அடிப்படையில், இந்த ஆண்டு தை அமாவாசை நாளான இன்று (பிப்.9), புனித நீராடல் நிகழ்ச்சி அதிகாலை முதலே தொடங்கியது.
இதை முன்னிட்டு, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடல், கன்னியாகுமரி கடல், குற்றாலம், பாபநாசம், சென்னை மயிலாப்பூர் தெப்பக்குளம், திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றங்கரை உள்ளிட்ட நீர்நிலைகளில் ஏராளமானோர் புனித நீராடி, எள் பச்சரிசி தர்ப்பணை வைத்து முன்னோர்களை வழிபட்டனர்.
அந்த வகையில், திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரி ஆற்று படித்துறையில் ஏராளமான மக்கள் அதிகாலை முதலே ஒன்று கூடி வாழை இலை, பூஜை சாமான்கள், அகத்திக்கீரை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கிச் சென்று, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு வருகின்றனர்.
இதில் திருச்சி மட்டுமல்லாமல் அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை போன்ற அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் கூடி, தங்களுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். தை அமாவாசையை முன்னிட்டு, பொதுமக்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக மாம்பழச்சாலை - ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனரக வாகனங்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
மேலும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிக்காக சுமார் 50க்கும் அதிகமான போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இதையும் படிங்க:"திமுக பாஜகவை பார்த்துப் பயப்படுவதால் நாங்கள்தான் தமிழ்நாட்டில் எதிர்கட்சி" - அமர் பிரசாத் ரெட்டி