தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நோட்டீஸ் ஒட்ட வந்த அதிகாரிகளை தடுத்து வாக்குவாதம்.. போராட்டக்களமான திருவேற்காடு! - Thiruverkadu people protest - THIRUVERKADU PEOPLE PROTEST

Public protest in Thiruverkadu: சென்னை திருவேற்காட்டு பகுதியில் மக்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளதாக் கூறி நோட்டீஸ் ஓட்ட வந்த அரசு அதிகாரிகளை ஊருக்குள் நுழைய விடாமல் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை இழுத்துச் செல்லும் போலீசார்
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை இழுத்துச் செல்லும் போலீசார் (Photo credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 17, 2024, 4:02 PM IST

அரசு அதிகாரிகளை எதிர்த்து போராடும் மக்கள் (Video credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:சென்னை பூந்தமல்லி அடுத்த திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோயில் தெரு பகுதியில் உள்ள சுமார் 160க்கும் மேற்பட்ட வீடுகள் கூவம் நதிக்கரையில் உள்ளன. இந்த வீடுகள் நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி, நீர்வளத்துறை சார்பில் கடந்த சில மாதங்களாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, தேர்தல் நேரத்தின் போது அதிகாரிகள் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும், சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள வீடுகளை அளவீடு செய்ய வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அளவீடு செய்ய வந்த அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த ஒரு சில வீடுகளை மட்டும் நீர்வளத்துறையினர் அளவீடு செய்து விட்டுச் சென்றுள்ளனர். மேலும், திடீரென எந்தவித முன்னறிவிப்பு ஏதும் வழங்காமல், அதிகாரிகள் வந்து வீட்டை அளவீடு செய்வதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் ஒட்டுவதற்காக பூந்தமல்லி தாசில்தார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்துள்ளனர். இதனை அடுத்து, அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அப்பகுதி பெண்கள் உட்பட ஏராளமான மக்கள் ஒன்று கூடி, அதிகாரிகளை தங்கள் பகுதிக்குள் வரவிடாமல் முற்றுகையிட்டனர்.

மேலும், அரசுத் துறை சார்ந்த அதிகாரிகளை ஊருக்குள்ளே நுழைய விடாமல் தடுத்து, எங்களை வாழ விடுங்கள் என்றும், எங்களை ஏன் இங்கிருந்து அகற்ற இவ்வளவு மும்முரம் காட்டுகிறீர்கள் என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் குண்டுகட்டாக அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. மேலும், கூடுதல் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில், அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “பல தலைமுறையாக நாங்கள் இப்பகுதியில் வாழ்ந்து வருகிறோம். இது எங்களுடைய ஊர். நாங்கள் இதை விட்டுச் செல்ல மாட்டோம். இந்த விவகாரத்தில் அரசு எங்களுக்கு உதவியும் செய்வதில்லை. மேலும், தற்போது நோட்டீஸ் ஒட்டவரும் காரணம் குறித்து கேட்டாலும் அதிகாரிகள் சரிவர பதிலளிப்பதில்லை" எனக் கூறுகின்றனர்.

முன்னதாக, அப்பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படும் சம்பவங்கள் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் நேரில் சென்று, அப்பகுதி மக்களின் குறைகளைக் கேட்டுச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மருத்துவர் இல்லாமல் பார்க்கப்பட்ட பிரசவம்... சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்த சோகம்

ABOUT THE AUTHOR

...view details