தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியிருப்பு பகுதிக்குள் நார் தொழிற்சாலை? கள்ளிப்பட்டி கிராமத்தினரின் கோரிக்கை என்ன? - pollachi COIR COMPANY issue

Pollachi coir company issue: குடியிருப்புகள் நிறைந்த கிராமத்திற்குள் செயல்படும் நார் தொழிற்சாலையால் ஆபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக பொள்ளாச்சி அடுத்த கள்ளிப்பட்டி கிராமத்தினர் புகார் தெரிவிக்கின்றனர்.

புகார் தெரிவித்த விஷ்ணுவர்தன்
புகார் தெரிவித்த விஷ்ணுவர்தன் (Credits-ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 27, 2024, 5:40 PM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கள்ளிப்பட்டி ஊராட்சியில் ஏராளமான நார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் விவசாய நிலப் பகுதிகளிலேயே செயல்பட்டு வருகின்றன. ஆனால், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகர், பொதுமக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் நார் தொழிற்சாலை அமைத்து செயல்படுத்தி வருவது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கள்ளிப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், "கள்ளிப்பட்டி ஊராட்சியில் குடியிருப்பு பகுதிக்குள், கள்ளிப்பட்டி புதூரைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவர், தென்னை நார் தொழிற்சாலை அமைத்து தொழில் செய்து வருகிறார். இந்த தொழிற்சாலை குடியிருப்பு பகுதிக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளதால், இதிலிருந்து வெளிவரும் மஞ்சி மற்றும் மஞ்சி துகள்கள் காற்றில் கலந்து முற்றிலும் மாசடையச் செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

மேலும், இதனால் எங்கள் ஊரில் வசிக்கும் பெரும்பாலானவர்களுக்கு பல்வேறு வகையான ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுவதாகவும், குழந்தைகள் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் தெரிவித்தனர். மேலும், மஞ்சி துகள்கள் தண்ணீர் தொட்டிகளில் விழுவதால் மனிதர்கள் மட்டுமின்றி, கால்நடைகளும் பாதிப்படைவதாகவும் கூறினர்.

தொழிற்சாலையில் இருந்து வரும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர், விவசாய பூமிக்குள் தேங்குவதால் கொசுக்கள் அதிக அளவில் உருவாகி டெங்கு, மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட நோய்களால், கிராமத்தில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுவதாகவும், நார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர், நேரடியாக விவசாய நிலத்தில் கலப்பதால் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் உள்ள குடிநீர் மாசடைவதாலும் விவசாயம் முற்றிலும் பாதிப்படைவதாக தெரிவித்தனர்.

எனவே, இங்குள்ள விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற, குடியிருப்பு பகுதிக்குள் செயல்பட்டு வரும் இந்த நார் தொழிற்சாலையை உடனடியாக அங்கிருந்து இடமாற்றம் செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: விக்ரமசிங்கபுரம் நகராட்சித் தலைவருக்கு எதிராக ஆளுங்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம்!

ABOUT THE AUTHOR

...view details