தமிழ்நாடு

tamil nadu

'உங்க வீட்டுக்கருகே பிளாஸ்டிக் தயாரித்தால் புகார் அளிங்க.. பாராட்டு பெறுங்க!' -மாசு கட்டுப்பாட்டு வாரியம் அழைப்பு! - COMPLAINT ON PLASTIC

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் சட்டவிரோத தொழிற்சாலைகளை பற்றி பொதுமக்கள் புகார் தெரிவித்து பாராட்டு பெறலாம் என்று தமிழ்நாடு மாசு கட்டு்ப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

Published : 4 hours ago

பிளாஸ்டிக் தொடர்பான கோப்புப் படம்
பிளாஸ்டிக் தொடர்பான கோப்புப் படம் (Credits- ETV Bharat Tamil Nadu/ Pollution Control Board Website)

சென்னை:ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடை அறிவிப்பை, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் தேதி அரசாணை எண்.84ல் வெளியிட்டது.

இதன்படி ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கோப்பைகள், தடிமனான பிளாஸ்டிக் கைப்பைகள், நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், உணவுப் பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பைகள் / பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்றவை தயாரிக்கப்படுவதும் சேமித்து வைப்பதும், விநியோகிப்பதும், போக்குவரத்து செய்வதும், விற்பதும், உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம், 100 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் அல்லது PVC விளம்பர பதாகைகள், முட்கரண்டி, கரண்டிகள், கத்திகள், உறிஞ்சு குழாய்கள், தட்டுகள் மற்றும் அழைப்பிதழ்கள், சிகரெட் பாக்கெட்டுகள் மேல் சுற்றப்பட்டுள்ள பிளாஸ்டிக் தாள்கள் போன்ற தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கினை தடை செய்துள்ளது.

இந்த பிளாஸ்டிக் தடையை திறம்பட செயல்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல்வேறு நிலைகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த அமலாக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வழக்கமான ஆய்வுகள் மற்றும் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டு மூடுதல் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

இதையும் படிங்க:"உற்பத்திக்கு தடை விதிக்காமல்... பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க முடியாது" - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து!

இதுவரை வாரியத்தால் தடை செய்யப்பட்ட 240 பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது. மேற்கூறியவற்றை மீறி, குடியிருப்பு/வணிக நிறுவனங்களுக்குள் ஒரு சிறிய இடத்தில் இணைந்து செயல்படும் மற்றும் சட்டவிரோதமாக செயல்படும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் அனைத்து பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களை கண்டறிவது சவாலாக உள்ளது.

இந்த உற்பத்தியாளர்களில் பெரும்பாலானவர்கள், எந்த அரசு துறைகளிடமும் முறையான பதிவு மற்றும் அனுமதி இல்லாமல் முற்றிலும் தற்காலிமாக செயல்பட்டு வருகின்றன. எனவே, சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு அருகில் குடியிருப்பவர்கள் சட்டவிரோதமாக இயங்கும் தொழிற்சாலைகள் பற்றிய விவரங்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த புகார்களை மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அந்தந்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களிடம் தெரிவிக்கலாம். அவர்களின் தொடர்பு விவரங்கள் வாரியத்தின் இணையதளத்தில் (https://tnpcb.gov.in/contact.php) கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த புகார்களை மின்னஞ்சல்/ கடிதம்/ தொலைபேசி அழைப்புகள்/ வாட்ஸ் அப் மூலம் பதிவு செய்யலாம். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதில் பங்களிக்கும் சுற்றுச்சூழல் அக்கறை கொண்ட பொதுமக்கள் பாராட்டப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details