சென்னை:ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த மூன்று நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வந்தது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டது.
இதில், மேற்கு மாம்பலம் மற்றும் தி நகரை இணைக்கும் மேட்லி சப்வேயில் நேற்று (நவ.30) பெய்த அதிக கனமழை காரணமாக மழைநீர் தேங்கி போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த சுரங்கப் பாதை அடைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள தெருக்களில் தண்ணீர் அதிக அளவு தேங்கி இருந்த நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் அதை அகற்றும் பணியில் ஈடுப்பட்டனர்.
இது குறித்து அப்பகுதியில் உள்ள மக்கள் நமது ஈ டிவி பாரத் தமிழ் ஊடகத்திற்கு இன்று (டிச.1) காலை 10 மணி அளவில் பேட்டி அளித்தனர். அப்போது தனியார் அலுவலகத்தில் வேலை செய்யும் பார்த்திபன் கூறுகையில், "நேற்றில் இருந்து கடும் மழை பெய்து வருகிறது. இந்த சுரங்க பாதையில் மழைநீர் அதிகளவு தேங்கியுள்ளது. அதனால் பாதுகாப்பு கருதி பாலத்தை மூடிவிட்டனர்.
மாநகராட்சி ஊழியர்கள் நேற்று முதல் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மழை நின்ற பிறகு ஆங்காங்கே தேங்கி இருந்த தண்ணீர் தானாக வடிய ஆரம்பித்துவிட்டது. ஆனால் இந்த சுரங்க பாதை வழியில் மட்டும் இன்னும் தண்ணீர் வெளியேறவில்லை.