புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட நம்பன்பட்டி கிராமத்தில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்குக் கடந்த ஆறு மாத காலமாக முறையான குடிநீர் வழங்கவில்லை எனவும், அதிலும் கடந்த ஒரு வாரக் காலமாக முழுவதுமாக குடிநீர் வரவில்லை என குற்றம் சாட்டி அந்த பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளர் பவுல்ராஜ் தலைமையிலான போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையில், சற்று நேரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் வந்துவிடுவார் உங்கள் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.