மயிலாடுதுறையில் சுற்றித்திரிந்த சிறுத்தை கும்பகோணம் பகுதியில் இருப்பதாக வதந்தி தஞ்சாவூர்: மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு, சித்தர்காடு பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு காணொளி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அதனை வனத்துறையினர், மாவட்ட நிர்வாகமும் உறுதிப்படுத்தியது. சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது இந்த சிறுத்தை தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பழவாத்தான் கட்டளை ஊராட்சி, முத்தய்யா பிள்ளை மண்டபம் பகுதியில் பதுங்கியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் தவறான செய்தி பரவியதால் கும்பகோணம் பகுதி மக்களிடையே வெளி இடங்களில் செல்லவும், நடமாடவும் அச்சம் கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் இத்தகைய வதந்திகளைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய சமூக அப்பகுதி மக்கள், “பொதுமக்களிடையே இப்படி சிறுத்தை குறித்து தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் ஒரு சிலர் வேண்டும் என்றே விளையாட்டுப் போக்கில், இதன் ஆபத்து குறித்துத் தெரியாமல் பரப்பி அனைவரையும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தி அதில் இன்பம் காண்கிறார்கள்.
அத்தகைய நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும் அதற்குரிய நடவடிக்கையினை தஞ்சை மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறையினர், வனத்துறையினர் இணைந்து மேற்கொண்டு இத்தகைய தவறான செய்திகள் பரவுவதை, வதந்திகள் பரவுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்” என தமிழ்நாடு அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! - Thanjavur Big Temple