தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நள்ளிரவில் தூங்கியவர்கள் மீது போலீசார் தடியடி? கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் நடந்தது என்ன? - Koyambedu Bus Stand - KOYAMBEDU BUS STAND

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இரவில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாகக் கூறி, அங்கிருந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்பேடு
கோயம்பேடு (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2024, 8:02 AM IST

சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தினந்தோறும் இரவு நேரத்தில் தூங்குவது வழக்கம். இவ்வாறு பேருந்து நிலையத்தில் தூங்கிவிட்டு, காலையில் அங்கிருந்து பணிக்குச் சென்றுவிட்டு மீண்டும் இரவில் வந்து தங்குவர்.

இந்த நிலையில், இரவில் தூங்கிக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றவர்கள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை அங்கு தூங்கக்கூடாது என போலீசார் திடீரென தடியடி நடத்தி அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

மேலும், போலீசாரின் இந்த திடீர் நடவடிக்கையால் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோயம்பேடு பேருந்து நிலையம் முகப்பு வாயிலில் அமர்ந்து, போலீசாரைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு உள்ளே பேருந்துகள் செல்ல முடியாமல் சாலையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

இதையும் படிங்க:திடீரென பற்றி எரிந்த பைக்..கோயம்பேடு மார்க்கெட்டில் பரபரப்பு!

இதனையடுத்து அங்கு வந்த உயர் அதிகாரிகள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும், பாதிக்கப்பட்டோர் போலீசாரின் தாக்குதலைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்தனர். இதனையடுத்து, போலீஸாரின் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பாதிக்கப்பட்ட நபர்கள் மீண்டும் பேருந்து நிலையத்தின் உள்ளே படுக்க அனுமதிக்கப்பட்டதால், அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details