அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சோழபுரத்தில், கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் உள்ளது. இது ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய நந்தி உள்ள கோயில் ஆகும். இந்த நிலையில் இக்கோயில் தீர்த்தக்குளம் அருகேயுள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஏலம் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் மூலம் பக்தர்கள் கட்டணம் செலுத்தி வாகனங்கள் நிறுத்துவதற்கும், பொதுமக்கள் அமருவதற்கும் பயன்படுத்தி வந்தனர். இதனால், ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அரசுக்கு வருவாய் ஈட்டப்பட்டு வந்தது. தற்போது இந்து சமய அறநிலையத் துறையினர் சார்பில், கோயிலுக்கு முன்புள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால், அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் வேலி அமைப்பதற்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே கோயிலுக்குச் செல்லும் முகப்பு சாலை குறுகலாக உள்ளதால், திருவிழா காலங்களில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுகிறது. தற்போது தடுப்பு வேலி அமைப்பதால் போக்குவரத்து இன்னும் கடுமையாக பாதிக்கப்படும் எனக் கூறுகின்றனர்.