தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“இந்தியாவிற்கு தான் அபாயம்” - பழ.நெடுமாறன் கூறுவது என்ன? - Pazha Nedumaran - PAZHA NEDUMARAN

Pazha Nedumaran: தவறான கொள்கையினைத் தொடர்ந்து பின்பற்றி சீனா அபாயத்தை இந்தியாவின் எல்லைக்கு அருகே கொண்டு வந்துள்ளீர்கள் எனவும், ஆபத்து ஈழத் தமிழர்களுக்கு அல்ல, இந்தியாவிற்கு என்று உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவா் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

Pazha Nedumaran
பழ நெடுமாறன் புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 19, 2024, 10:24 PM IST

பழ நெடுமாறன் செய்தியாளர் சந்திப்பு (credits - ETV Bharat Tamil Nadu)

தஞ்சாவூர்: இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் வகையில், முள்ளிவாய்க்கால் 15வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, நேற்று தஞ்சாவூர் விளார் சாலையிலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில், உலகத் தமிழர் பேரமைப்பு தலைவார் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், பழ.நெடுமாறன் கூறியதாவது, “இலங்கையில் 2009ஆம் ஆண்டு பேரழிவிற்கு ஆளான நிலையில், உலகத்தில் யாரும் நமக்கு குரல் கொடுக்க முன்வரவில்லை. குறைந்தபட்சம் தமிழர்களாவது ஒன்றுபட்டு போராடி இருந்தால், இந்த அவலத்தை ஓரளவிற்கு தடுத்திருக்க முடியும். இந்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து இருக்க முடியும்.

2009ஆம் ஆண்டுக்கு முன்பாக சீனா அங்கு கால் ஊன்ற முடியவில்லை. இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து என தவறான காரணத்தைக் கூறி, விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவதற்கு, சிங்கள அரசிற்கு அனைத்து உதவிகளையும் செய்தீர்கள்.

ஆனால், 2009-க்கு பிறகு சீனா அங்கு ஆழமாக காலூன்றி இருக்கிறது. சீனா காலூன்றி இருப்பதற்கு காரணம், இலங்கையின் தென்கோடியில் ரூ.10 ஆயிரம் கோடி செலவு செய்து ஒரு கடற்படை தளத்தை அமைத்துள்ளது. அதன் விளைவு, இந்து மாக்கடல் சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சி. இந்தியாவிற்கு எதிரான ஒரு தளம் இந்தியாவிற்கு பக்கத்திலேயே கிடைத்திருக்கிறது. ஆபத்து ஈழத் தமிழர்களுக்கு அல்ல, இந்தியாவிற்கு.

இந்தியா மீட்கப்பட வேண்டும் என்றால், மீண்டும் விடுதலைப் புலிகளின் கரம் ஓங்க வேண்டும். இதை டெல்லியில் ஆட்சியில் இருக்கிறவர்கள் உணர்வதற்கு பதில், விடுதலைப் புலிகளுக்கு தடை போடுகிறார்கள். டெல்லியில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், ஈழத் தமிழர் பிரச்னையில் தவறான முடிவுகளையே எடுக்கிறீர்கள். இதன் விளைவு வேறு விதமாக இருக்கும் என்பதை உணர வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறுகையில், “இந்தியா முழுவதும் தேசிய ஒருமைப்பாடு என்று கூப்பாடு போடுகிற அகில இந்திய கட்சிகள், கர்நாடகத்திலும், கேரளத்திலும் ஆட்சி செய்கின்றன. காவிரி பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னையிலும் உச்ச நீதிமன்றம் என்ன உத்தரவு போட்டாலும் அதை மதிக்க மறுக்கிறார்கள். தவறானக் கொள்கையினை தொடர்ந்து பின்பற்றி, அதன் விளைவாக சீனா அபாயத்தை இந்தியாவின் எல்லைக்கு அருகே கொண்டு வந்துள்ளீர்கள்.

இந்த அபாயத்திலிருந்து மீள வேண்டுமானால், இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு அமைந்தால் ஒழிய இந்த அபாயத்தை தடுக்க முடியும் என்பதை இந்திய அரசு உணர வேண்டும். தமிழீழ தலைவர் பிரபாகரன் நலமாக, பத்திரமாக இருக்கிறார், உரிய நேரத்தில் வெளிப்படுவார். அதற்கான ஆதாரங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்” இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் உலகத் தமிழர் பேரமைப்பு துணைத் தலைவர் அயனாபுரம் முருகேசன், கென்னடி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:துணை மின் நிலையங்கள் தனியாரிடம் மீண்டும் ஒப்படைப்பா? மின் வாரிய ஊழியர்கள் எதிர்ப்பு! - TANGEDCO

ABOUT THE AUTHOR

...view details