சென்னை: சென்னை, கிளாம்பாக்கத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பௌர்ணமி தினம் மற்றும் ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) என்பதால் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல அதிகளவிலான பயணிகள் வருகை தந்ததால் ஏராளமான பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்டன.
இதனால் மற்ற ஊர்களுக்கு அரசு பேருந்துகள் குறைவாகவே இயக்கப்பட்டது. குறிப்பாக கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, ஜெயங்கொண்டம், பண்ருட்டி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் ஏராளமான பொதுமக்கள் நேற்று (ஜூலை 20) இரவு பேருந்து நிலையத்திலேயே காத்திருந்துள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகளிடம் சென்று கேட்ட பயணிகளுக்கு முறையான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த பொதுமக்கள், பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் அரசு பேருந்துகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, பேருந்து நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், பயணிகள் காவலர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதன் காரணமாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதையடுத்து நள்ளிரவில் பேருந்துகள் இயக்கப்பட்டதை அடுத்து பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.