தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"சென்னையில் முக்கிய இடங்களில் வாகன நிறுத்தம் இலவசம்" - சென்னை மாநகராட்சி அறிவிப்பு! - free parking in chennai - FREE PARKING IN CHENNAI

Chennai Corporation: புதிய ஒப்பந்தம் விடும் வரை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட எல்லைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டாம் எனவும், மீறி கட்டணம் வசூலிக்கப்பட்டால் காவல்துறையில் புகார் அளிக்கலாம் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Chennai Road
சென்னை சாலை (Credits - Chennai Traffic Police 'X' Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 8, 2024, 9:45 PM IST

சென்னை:சென்னையில் சாலையோர வாகன நிறுத்தத்திற்கு புதிய ஒப்பந்தம் வரும் வரையில் மெரினா, பெசன்ட் நகர், பாண்டி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களைத் தடுக்க முக்கிய இடங்களில் பார்க்கிங் வசதிகளை மாநகராட்சி செய்து வருகிறது. முக்கிய வணிகப் பகுதிகள், வணிக நிறுவனங்கள், சுற்றுலாப் பகுதிகள், பூங்காக்கள், தனியார் மால்கள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பார்க்கிங் பிரச்னைகள் இருப்பதால் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றன.

இதனால் கிடைக்கும் இடங்களில் எல்லாம் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். இவ்வாறு வாகனங்களை நிறுத்துவதால் அந்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.

எனவே, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வாகனங்களை நிறுத்துவதற்காக தி.நகர், திருவல்லிக்கேணி, அடையாறு, அம்பத்தூர், அண்ணாநகர், அசோக் நகர், பெசன்ட் நகர், மெரினா, புரசைவாக்கம் உள்ளிட்ட 170 இடங்களில் இவை கண்டறியப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்கும் பொருட்டு ஸ்மார்ட் சிட்டி (Smart City) திட்டத்தின் கீழ் வாகனங்களை நிறுத்தவதற்கான பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கட்டணத்தைவிட அதிகமாக வசூலிப்பதை தடுக்கும் வகையில், வாகன நிறுத்தங்களில் 25 மீட்டர் இடைவெளியில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனை அந்த நிறுவனம் கடைப்பிடிக்காமல் அதிகப்படியான தொகையை வாகன ஓட்டிகளிடம் வாங்குவதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. விரைவில் வேறு புதிதாக ஒப்பந்தம் போடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பார்க்கிங் ஒப்பந்தத்தை ரத்து செய்தது செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது.

அதன் அடிப்படையில், சென்னையில் சாலையோர வாகன நிறுத்தத்திற்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய ஒப்பந்தம் விடும் வரை மெரினா, பெசன்ட் நகர், பாண்டி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை இலவசமாக நிறுத்தி கொள்ளலாம் என்றும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட எல்லைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு, கட்டணம் செலுத்த வேண்டாம் எனவும் மீறி கட்டணம் வசூலிக்கப்பட்டால் காவல்துறையில் புகார் அளிக்கலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி? காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தின் தீர்மானம் என்ன? - Rahul Gandhi

ABOUT THE AUTHOR

...view details