கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், வடவள்ளியை அடுத்து தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், அந்தப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு நூலக பொறுப்பாளராக பணிபுரிந்தவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி, அவரது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார்.
இதனை மாணவி படிக்கும் வகுப்பு ஆசிரியை ஒருவரிடம் பெற்றோர் தெரிவித்து உள்ளனர். இந்த விவகாரம் தனியார் பள்ளிகளின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் அதிகாரி ஒருவரின் கவனத்துக்குச் சென்றுள்ளது. அவர் பள்ளிக்கு நேரில் சென்று விசாரித்து உள்ளார். சம்பவம் தொடர்பாக தனக்கு அறிக்கை அளிக்கும்படி அவர் பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு உள்ளார். \
இந்த நிலையில், நூலக பொறுப்பாளர் திடீரென ராஜினாமா செய்து வேலையை விட்டு நின்று விட்டார். தற்போது இந்த விவகாரம் வெளியே கசியத் தொடங்கி பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோல் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டால் போலீசில் புகார் செய்ய வேண்டும் என அனைத்து பள்ளிக்கும், போலீசாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால், அவ்வாறு புகார் செய்யாமல் அந்த பள்ளி நிர்வாகம் அதனை மூடி மறைக்க முயல்வதாக பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும், மாவட்டப் பள்ளிக் கல்வி அதிகாரிகளுக்கும் அவர்கள் தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி நூலக பொறுப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர். இந்த நிலையில், இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்.. முதியவர் போக்சோவில் கைது!