மதுரை:வண்டியூர் வைகை ஆற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் கள்ளழகர், மண்டுக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்விற்காக, கொட்டகை முகூர்த்தக் கால் நடும் விழா இன்று (ஏப்.08) கோலாகலமாக நடைபெற்றது.
ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின்போது மதுரை மாநகர் கோலாகலமாக்க காணப்படும். அந்த வகையில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நடைபெறும் கொடியேற்றம், திருக்கல்யாணம், தேரோட்டம், அதனைத் தொடர்ந்து வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளுதல் என ஒவ்வொரு நாளும் மதுரை விழாக்கோலம் பூண்டிருக்கும்.
மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக, அழகர் மலையிலிருந்து சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடம் தரித்து வண்டியூர் பகுதியில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளி, சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் வரும், ஏப்.24 ம் தேதி நடைபெறவுள்ள இந்த நிகழ்விற்கான, பந்தல்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தேனூர் மண்டபத்தில் தேனூர் கிராம முக்கியஸ்தர்கள், கள்ளழகர் கோயில் நிர்வாகத்தினர், மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ள, கொட்டகை முகூர்த்தம் என்று சொல்லக்கூடிய பந்தல்கால் நடப்பட்டது.