மதுரை:ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே பாம்பனில் கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலம் இந்த ஆண்டின் இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும் வகையில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
பழைய பாம்பன் பாலம்:அதிகரித்து வரும் பயண தேவைகளைக் கருத்தில் கொண்டு, பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய பாம்பன் ரயில் பாலம் 110 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்து வந்தது.
குறிப்பிட்ட கால இடைவெளியில் வர்ண பூச்சு செய்தும், கடல் உப்புக் காற்று காரணமாக கப்பல்களுக்கு வழி விடுவதற்காக திறக்கப்படும் பாலத்தின் கிர்டர் பகுதிகள் துருப்பிடிக்க ஆரம்பித்தது. சில இடங்களில் துரு காரணமாக இரும்பு பட்டைகளின் கனம் குறைய ஆரம்பித்தது.
குறைந்த வேகம்:இந்நிலையில், பாலத்தின் அபாய நிலை காரணமாக, ரயில்கள் 2 கிலோ மீட்டர் பாலப் பகுதியில் 10 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்பட்டன. பராமரிப்பிற்காக ரயில் போக்குவரத்தை அடிக்கடி நிறுத்த வேண்டிய சூழ்நிலை இருந்தது. தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த பாலத்தை தொடர்ந்து பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும் என கருத்து தெரிவித்திருந்தனர்.
புதிய பாலத்தில் நவீன வசதிகள்:இதையடுத்து பல்வேறு நவீன வசதிகளுடன் ரூபாய் 550 கோடி செலவில் புதிய பாலம் கட்ட ரயில்வே வாரியம் முடிவு செய்தது. புதிய பாலம் கடலில் 2.8 கி.மீ நீளத்திற்கு, நடுவில் பெரிய கப்பல்கள் சென்று வரும் வகையில் கட்டப்பட்டு வருகிறது.
நடுவில் உள்ள 72.5 மீட்டர் லிஃப்டிங் கிர்டர் செங்குத்தாக மின் இயந்திரவியல் சக்தி மூலம் திறந்து கப்பல்களுக்கு வழிவிடும். பழைய பாலம் இருபுறமும் ஐந்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் மனித ஆற்றல் மூலம் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய பாலம் செங்குத்தாக திறக்கப்படும் இந்தியாவின் முதல் பாலமாக அமைய இருக்கிறது. பெரிய கப்பல்கள் சென்று வரும் வகையில் நடுவில் உள்ள லிப்டிங் கிர்டர் 17 மீட்டர் உயரத்திற்கு மேலே செல்லும். இது அருகிலுள்ள சாலை பாலத்திற்கு இணையான உயரம் ஆகும்.
லக்னோ ரயில் ஆய்வு அமைப்பு:கடல் பகுதியை பாதுகாக்கும் வகையில் லக்னோ ரயில் ஆராய்ச்சி வடிவமைப்பு தர நிர்ணய அமைப்பின் ஆலோசனையின் பேரில் பாலத்தின் கிர்டர்களை வடிவமைக்கும் பணி பாம்பனில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சத்திரக்குடி ரயில் நிலையத்தில் நடைபெற்றது. அங்கிருந்து வடிவமைத்துக் கொண்டு வரப்பட்ட கிர்டர்கள் மற்றும் லிப்டிங் ஸ்பேன் ஆகியவை பாலத்தில் பொருத்தப்பட்டு வருகின்றன.
கடலில் 333 காங்கிரிட் அடித்தளங்கள், 101 காங்கிரிட் தூண்கள் ஆகியவை ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டு விட்டன. எதிர்காலத் தேவையை கருத்தில் கொண்டு இரட்டை ரயில் பாதை அமைக்கும் வகையில் அடித்தளமும் தூண்களும் அகலமாக அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போதைய தேவையை கருத்தில் கொண்டு ஒரு ரயில் பாதை மட்டுமே அமைக்கப்படுகிறது.