தேனி: சவுக்கு சங்கர் காரிலிருந்து அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, சவுக்கு சங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் பிரபு மற்றும் ராஜரத்தினம் ஆகிய இருவர் மீதும் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபல யுடியூபர் சவுக்கு சங்கர், தமிழ்நாடு காவல்துறை மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, தேனியில் இருந்த அவரை கைது செய்து இன்று (சனிக்கிழமை) கோவை அழைத்து வந்தனர்.
இதனிடையே, காலை 7 மணி அளவில் தாராபுரம் வழியாக சவுக்கு சங்கரை அழைத்துக் கொண்டு வந்த காவல்துறை வாகனம், தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் எதிரே வந்த கார் மோதி விபத்தில் சிக்கியது. இதில் காவலர்கள் மற்றும் சவுக்கு சங்கர் என அனைவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டது.
இதனையடுத்து உடனடியாக அனைவரும் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் சவுக்கு சங்கருக்கு உதடு மற்றும் கால் முட்டியில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு தாராபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் கோவை அழைத்துச் செல்லப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, சவுக்கு சங்கர் மீது 294(b), 509 மற்றும் 353 இந்திய தண்டனைச் சட்டம் (IPC) r/w பிரிவு 4 தமிழ்நாடு பெண் துன்புறுத்தல் தடைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 பிரிவு 67 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கோவை மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தேனியில் உள்ள ஒரு விடுதியில் இருந்த சவுக்கு சங்கர் காரில் போதைப் பொருட்கள் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அவரது காரை தேனி போலீசார் சோதனை செய்துள்ளனர். இதில், அவரது காரிலிருந்து அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், சவுக்கு சங்கர் மீது பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக அவரது உதவியாளர்கள் பிரபு மற்றும் ராஜரத்தினம் ஆகிய இருவர் மீது இரண்டு பிரிவுகளில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில், சவுக்கு சங்கருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் விதித்து கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கோபாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:கடத்தல் மற்றும் ஆபாச வீடியோ வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் எச்.டி.ரேவண்ணா கைது! - Revanna Anticipatory Bail Dismissed