திண்டுக்கல்:பழனியில் தனியார் கோயிலுக்குச் சொந்தமான யானை சரஸ்வதி, உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளது. இதனால் கோயில் வளாகத்தில் இறுதிச் சடங்குகளுக்கான பணிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு இறந்த யானைக்கு அஞ்சலி செலுத்தினர்.
சரஸ்வதி யானைக்கு பக்தர்கள் இறுதி அஞ்சலி (Credits - ETV Bharat Tamil Nadu) திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தேவஸ்தானத்திற்குச் சொந்தமான கோயில் யானை கஸ்தூரி மற்றும் தனியார் கோயிலுக்குச் சொந்தமான சரஸ்வதி (67) என்ற இரண்டு பெண் யானைகள் பழனி பகுதிகளில் பக்தர்களுக்கு மிகவும் விருப்பமான யானைகளாகும்.
இதில், தனியார் வன்னி விநாயகர் கோயில் சரஸ்வதி யானை கடந்த 6 மாதங்களாக எலும்பு தேய்மானம், மூட்டு பிரச்னை, வயதுமூப்பு காரணமாக காலில் காயங்களுடன் மற்றும் உடல் நலக்குறைவால் நடக்க முடியாமல் இருந்து வந்துள்ளது. மேலும், சரஸ்வதி யானையின் எடை சுமார் 2 ஆயிரத்து 800 கிலோவுக்கு மேலாக உள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக சரஸ்வதி யானைக்கு கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனச்சரக மருத்துவர்கள் ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க:யானை தாக்கியதில் கோவை, நீலகிரியில் இருவர் பலி
யானைக்குத் தேவையான மருந்துகள் மற்றும் யானைக்கு உடற்பயிற்சி ஏற்பாடுகள் என பல வகையில் யானையின் உடல் நலம் தேறிவந்துள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு 8.45 மணியளவில் சரஸ்வதி யானையானது சிகிச்சை பலனின்றி உடல் நலக் குறைவால் உயிரிழந்தது.
இந்நிலையில், வன்னி விநயாகர் கோயில் வளாகத்தில் இறுதிச் சடங்குகளுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு ஏராமான பொதுமக்கள் இறந்த சரஸ்வதி யானைக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அப்போது அங்கிருந்த பெண்மணி ஒருவர், “சரசு..தங்க புள்ளை..கூப்பிடவுடன் உணவுகளை வாங்கிச் சாப்பிடும், இப்படி போய்ட்டியே” என கண்ணீர் விட்டு கதறினார்.
மேலும், உடுமலையில் இருந்து மாதம் மாதம் வரும்போதெல்லாம் சரஸ்வதி யானையை பார்க்காமல் செல்லமாட்டோம் என்று பக்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, ஆனைமலை சரணாலய உதவி மருத்துவர் விஜய ராகவன், “கடந்த 6 மாதங்களாக யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. யானைக்கு நோய் வாய்ப்பட்ட பின்பு மருத்துவம் அளிக்கப்பட்டு உடல் தேறி வந்தது. ஆனால், தற்போது யானை திடீரென இறந்துள்ளது. தற்போது யானையின் உடல் உடற்கூறாய்விற்கு கொண்டு செல்லப்படுகிறது. உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டால் மட்டுமே இறந்ததற்கான காரணம் தெரிய வரும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.