திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் 3ஆம் படை வீடான பழனி முருகன் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் தரிசனம் செய்ய தமிழ்நாடு மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவர். சாதாரண நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விஷேச நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் வருகை தருவது வழக்கம்.
அவ்வாறு வருகை தரும் பக்தர்கள், கோயில் உண்டியலில் பணம், நகைகளை காணிக்கையாகச் செலுத்துகின்றனர். இவை கோயில் நிர்வாகம் சார்பில் எண்ணி கணக்கிடப்படுகிறது. அதன்படி, கடந்த மார்ச் 14ஆம் தேதி பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. அதையடுத்து, பழனி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த மாதம் 18ஆம் தேதி நடந்தது. இதையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனி கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, கோயில் உண்டியல்கள் நிரம்பியதால், அதிலுள்ள காணிக்கை எண்ணி அளவிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பங்குனி உத்திர திருவிழாவுக்குப் பிறகு பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில், மலைக்கோயில் மண்டபத்தில் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், கோயில் பணியாளர்கள், வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.