தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்திய சாலைகளை மேம்படுத்த ஆண்டிற்கு 600 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் தேவை; பத்மஸ்ரீ வாசுதேவன் சிறப்பு பேட்டி! - PADMA SHRI VASUDEVAN

பிளாஸ்டிக்கை தடை செய்வதைவிட, அதனை திறமையாகப் பயன்படுத்தும் வகையில் திட்டமிடுவதுதான் புத்திசாலித்தனம் என்கிறார் பிளாஸ்டிக் தார் சாலைகள் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்த பத்மஸ்ரீ முனைவர் ராஜகோபாலன் வாசுதேவன்.

பத்மஸ்ரீ முனைவர் ராஜகோபாலன் வாசுதேவன்
பத்மஸ்ரீ முனைவர் ராஜகோபாலன் வாசுதேவன் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 20, 2025, 8:13 PM IST

மதுரை: சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருளாகக் கருதப்படும் பிளாஸ்டிக்கை, அதற்கு உகந்ததாக எவ்வாறு மாற்றலாம் என்ற சிந்தனையின் விளைவாகத் தான் கண்டறிந்த தொழில்நுட்பத்திற்காகவே கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருதைப் பெற்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்தவர் முனைவர் ராஜகோபாலன் வாசுதேவன். தன்னுடைய கண்டுபிடிப்பை யாருக்கும் விற்காமல் தேசத்தின் வளர்ச்சிக்காகவே வழங்கியவர். அவரிடம் ஈடிவி பாரத் ஊடகத்திற்காக சிறப்பு நேர்காணல் நடத்தினோம்.

ராஜகோபாலன் வாசுதேவன் கூறியதாவது; பிளாஸ்டிக் ரோடு என்பது உலகளவில் மிகவும் முக்கியத்துவமாகிவிட்டது. இனி வருங்காலங்களில் இந்தியா முழுவதும் பிளாஸ்டிக்கால் ஆன தார்ச்சாலைகளே அமைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு அண்மையில் அரசாணையும் பிறப்பித்துள்ளது எனும் அளவிற்கு இந்தத் தொழில்நுட்பம் கவனம் பெற்றுள்ளது. மலேசியா, இந்தோனேசியா உள்பட பல வெளிநாடுகளும் நமது இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு முன்வரத் தொடங்கியுள்ளன. இதற்குக் காரணம் எங்களது கல்லூரி ஆய்வகத்தில் நடைபெற்ற இந்தக் கண்டுபிடிப்புதான். இன்று உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்துள்ளது.

மாற்று சிந்தனை

கடந்த 2000-ஆம் ஆண்டு வாக்கில் திடீரென பிளாஸ்டிக் தடை குறித்த சிந்தனையும் செயல்பாடும் வேகம் பெறத் தொடங்கின. அச்சமயம் தமிழ்நாடு முழுவதும் பிளாஸ்டிக் தொழில் சார்ந்து 7 ஆயிரம் நிறுவனங்கள் இயங்கி வந்தன. ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் அங்கு வேலை பார்த்து வந்தனர். அவர்கள் அனைவருக்கும் வேலை போய்விடுமே என்ற தாக்கம் எங்களுக்குள் ஏற்பட்டபோது, இதற்கான மாற்று குறித்து யோசிக்கத் தொடங்கினோம். கழிவாக மாறும் பிளாஸ்டிக்கை பயன்பாட்டுப் பொருளாக மாற்றிவிட்டால் இதற்குத் தீர்வு கிடைக்கலாம் என ஆய்வுகள் நடத்தத் துவங்கினோம்.

நம்பினேன்

பிளாஸ்டிக்கை தூக்கி எறிவதால் ஏற்படும் விளைவுகளைக் கட்டுப்படுத்தி, அதற்கான தேவையை உருவாக்குவோம் என முடிவெடுத்தோம். பிளாஸ்டிக் என்பது பெட்ரோலியத்தின் உப பொருளான தார் போன்று வந்த ஒரு பொருள்தான். தாரையும், பிளாஸ்டிக்கையும் கலந்து சாலை அமைத்தால் சாலை அமைக்கவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் என இரண்டு விதமான பயன்பாடுகள் அமைய வாய்ப்பு ஏற்படும் என முடிவெடுத்தோம்.

பத்மஸ்ரீ முனைவர் ராஜகோபாலன் வாசுதேவன் (credit - ETV Bharat Tamil Nadu)

அப்துல் கலாம் தந்த ஊக்கம்

அந்த சமயம்தான் எங்கள் கல்லூரி விழாவிற்கு நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வருகை தந்தார். அவரிடம் இப்படியொரு கண்டுபிடிப்பை நாங்கள் விளக்கினோம். இந்தத் திட்டத்தை வெகுவாகப் பாராட்டி, மேற்கொண்டு தொடருங்கள் என உற்சாகம் அளித்தார். இதற்கான தொழில்நுட்பம் மிக எளிதானது. சாலை போடக்கூடிய ஜல்லிக்கற்களை எடுத்து அதீத வெப்பநிலையில் 120 டிகிரி ஹீட் செய்து, அத்துடன் பொடிப்பொடியாக தூளாக்கப்பட்ட பிளாஸ்டிக் துகளை, அந்தக் கற்களோடு கலந்தால், பிளாஸ்டிக் காரணமாக கற்கள் மீது அடுக்கு (லேயர்) உருவாகும். அத்துடன் கலக்கப்படும் தார் மூலம் அமைக்கப்படும் சாலைகள் 15 ஆண்டிலிருந்து 20 ஆண்டுகள் தரத்துடன் நீடித்து உழைக்கும். இதையெல்லாம் குறிப்பிட்டு மத்திய அரசு அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளது.

நாட் டூ பேன்... பட் டூ பிளான்

சாதாரணமாக ஒரு கி.மீ. தூரம் அமைக்கப்படும் ஒரு வழிச் சாலைக்கு, ஒரு டன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. பத்து லட்சம் பிளாஸ்டிக் 'கேரி பேக்' இதற்கு பயன்படும். தற்போது இந்தியா முழுவதும் 64 லட்சம் கி.மீ. சாலைகள் உள்ளன. இவை அனைத்தும் பல்வழிச்சாலைகள் ஆகும். இவற்றில் பிளாஸ்டிக் தார் சாலைகள் அமைக்க, சுமார் 500லிருந்து 600 லட்சம் டன் பிளாஸ்டிக்குகள் தேவை. ஆனால், மாறாக இந்தியாவில் 30லிருந்து 35 லட்சம் டன் பிளாஸ்டிக்குள் மட்டுமே கிடைக்கின்றன. ஆகையால் தேவைக்கும், பயன்பாட்டிற்கும் மிகப் பெரிய இடைவெளி உள்ளது. இதன் மூலம் சாலை, போக்குவரத்து ஆகியவற்றில் செலவு மிகவும் குறைகிறது. இதனால்தான் பிளாஸ்டிக்கைப் பொறுத்தவரை ' Not to Ban... But to Plan...' என்கிறேன். பிளாஸ்டிக்கை தடை செய்வதைவிட, அதை வைத்து திட்டமிடுவதுதான் புத்திசாலித்தனம்.

பத்மஸ்ரீ முனைவர் ராஜகோபாலன் வாசுதேவன் (credit - ETV Bharat Tamil Nadu)

13 மாநிலங்களில் தார் சாலைகள்

இந்தியாவில் கிராம சாலைகள் மட்டும் 25 லட்சம் கி.மீ. உள்ளன. அதற்கு மட்டும் திட்டமிட்டாலே கிராமங்களுக்கு நல்ல தரமான, நீடித்த, நிரந்தரமான சாலை வசதியை ஏற்படுத்தித் தர முடியும். கிராமம் தான் இந்தியாவின் உயிர்நாடி. 65லிருந்து 75 சதவிகிதம் கிராமங்களால் நிறைந்ததுதான் இந்தியா. ஏறக்குறைய 3 லட்சம் கி.மீ. தூரம் தற்போது பிளாஸ்டிக் சாலைகள் இந்தியாவின் 13 மாநிலங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் ஊரக மேம்பாட்டுத்துறை ஒவ்வொரு ஆண்டும் மொத்த சாலைகளில் 15 சதவிகிதம் பிளாஸ்டிக் சாலைகள் அமைக்க முடிவு செய்துள்ளது. தற்போது மத்திய அரசு மொத்த சாலைகளையும் அவ்வாறே அமைக்கவும் அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் எல்லைப்பகுதிகள் முழுவதும் பிளாஸ்டிக் தார் சாலைகளே அமைக்கப்பட்டு வருகின்றன.

பத்மஸ்ரீ விருது

ஃபிலிம் என்று சொல்லக்கூடிய கேரி பேக், சாக்லெட் பேப்பர், குர்குரே கவர், மல்டி லேயர் இவற்றைதான் தற்போது பயன்படுத்தி வருகிறோம். இவையனைத்தையும் மொத்தமாகப் பெற வேண்டும். நமது வீடுகளில் கழிவுகளைத் தனித்தனியாக மக்கும் கழிவு, மக்காத கழிவு என பிரித்து வழங்கினாலே போதுமானது. பெறப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை வெயிலில் காய வைத்தால் மட்டும் போதும். பிறகு இதனை நறுக்கும் இயந்திரத்தில் 2மி.மீ அல்லது 4 மி.மீ. தூளாக்கினால் நமக்குத் தேவையான மூலப்பொருள் கிடைத்துவிடும். இதனைத்தான் நாங்கள் Collect it, Dry it, Cut it, Put it என்போம். உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டின் இருப்பதனால், இந்தத் தொழில்நுட்பத்தை அனைத்து நாடுகளும் பயன்படுத்த தயாராக உள்ளன. சமூகத்திற்காகப் பயன்படக்கூடிய எங்களுடைய இந்தக் கண்டுபிடிப்பை அங்கீகரிக்கும் விதமாகத்தான் நமது இந்திய அரசு எனக்கு கடந்த 2018ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி மரியாதை செய்தது.

தியாகராசர் பொறியியல் கல்லூரி,மதுரை (credit - ETV Bharat Tamil Nadu)

செலவு சரிபாதியாக குறையும்

தமிழ்நாட்டில் முதல்முறையாக கோவில்பட்டியில்தான் பிளாஸ்டிக் தார் சாலையை அமைத்தோம். அதற்குப் பிறகு சென்னையில் அமைத்தோம். எங்களது கல்லூரி வளாகத்திற்குள் கடந்த 2004-ஆம் ஆண்டு அமைத்தோம். தற்போதுவரை அந்த ரோடு பயன்பாட்டில் உள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் மற்றொரு சிறப்பு அம்சம், ஏற்கனவே அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் தார் சாலையைத் சுரண்டி, புதிதாக போடுவதற்காக கலக்கப்பட்ட பிளாஸ்டிக், தாருடன் சுரண்டிய சாலையையும் 50 சதவிகிதம் சேர்த்து மறுமுறையும் பயன்படுத்தலாம். இதனால் சாலை உயரமாவதைத் தடுத்து, தொடர்ந்து அதே மட்டத்திலேயே பேண முடியும். தரமும் குறையாமல் செலவும் சரிபாதியாகக் குறைகிறது. இதே போன்ற சாலையை விழுப்புரம் அருகில் செய்து காண்பித்தோம்.

அமெரிக்காவின் பேரம்

இந்தத் தொழில்நுட்பத்திற்கு அமெரிக்கா 300 மில்லியன் டாலருக்கு என்னிடம் விலை பேசியது. என்னுடைய குரு தாண்டவன் அளித்த அறிவுரையின்பேரில், இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக முழுவதும் மத்திய அரசிடமே ஒப்படைத்துவிட்டேன். ஆனால், இதற்கான காப்புரிமையை நான் பணியாற்றும் தியாகராசர் பொறியியல் கல்லூரிக்கு வழங்கிவிட்டேன். தற்போது இந்த தொழில்நுட்பம் இந்தியா முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிற நாடுகளுக்கு மட்டும் எங்கள் கல்லூரி மூலமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படுகிறது. மலேசியா, இந்தோனேசியா நாடுகளில் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. கென்யா, காங்கோ உள்ளிட்ட தென்னாப்பிரிக்கா நாடுகள் பலவும் தற்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளனர்.

பத்மஸ்ரீ முனைவர் ராஜகோபாலன் வாசுதேவன் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

மக்காத பொருளுக்கும் மதிப்புண்டு

ஏதோ ஒரு வகையில் பிளாஸ்டிக்கை உலகம் முழுவதும் பயன்பாட்டிற்கு கொண்டு வரும்போது, சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்ய முடியும். பிளாஸ்டிக் தார் சாலைகள் சூழலுக்கு உகந்ததாகும். கடவுள் படைப்பில் இங்கு எதுவுமே கழிவு என்பது கிடையாது. கழிவாகச் சொல்லப்படுவது ஏதேனும் ஒருவகையில் பயன்பாட்டிற்குரியதுதான் என்பது என்னுடைய அழுத்தமான நம்பிக்கை. பிளாஸ்டிக் மக்காத பொருள், ஆகையால் அதனை ஒழிக்க வேண்டும் என சொல்கின்றனர். உலகத்தில் மக்காத பொருட்கள் நிறைய உண்டு. கல், செங்கல் மக்காதவையே. ஆனால், அவற்றை நாம் பயன்படுத்துகின்றோமே. அதேபோன்றுதான் தங்கம். அதேபோன்றதுதான் பிளாஸ்டிக்கும்.

கட்டுமானப் பொருட்கள்

இதே பிளாஸ்டிக்கை வைத்து பல கட்டுமானப் பொருட்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம். பிளாஸ்டிக்கையும், ஸ்டோனையும் பயன்படுத்தி டைல்ஸ் உருவாக்கியுள்ளோம். அதற்கு பிளாஸ்டோன் எனப் பெயரிட்டுள்ளோம். இதில் மண், தண்ணீர் உள்ளிட்ட எந்தப் பொருட்களும் கிடையாது. ஆனால் இது கிரானைட்டின் திறனுக்கு மேலானது. அதேபோன்ற செராமிக் கலந்து சில பொருட்களையும் உருவாக்கியுள்ளோம். இதே பிளாஸ்டோன் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் கட்டுமான செலவுகளை மிகப் பெருமளவு குறைக்கும். காங்கிரீட்டைப் போல பத்து மடங்கு உறுதியானது. வீடு, சுற்றுச்சுவர், கழிப்பறை போன்ற அனைத்தையும் அமைக்கலாம். பிளாஸ்டோன் டைல்ஸ் கொண்டு கழிப்பறை கட்டினால் வெறும் ரூ.12 ஆயிரம் மட்டுமே செலவாகும். வெறும் இரண்டே மணி நேரத்தில் கழிப்பறை கட்டிவிட முடியும். சாலை அமைப்பதற்கு மட்டும் 600 லட்சம் டன் பிளாஸ்டிக் தேவையென்றால், கட்டுமானப் பொருட்களையும் உருவாக்க ஆரம்பித்தால் சுமார் 1,000 லட்சம் டன் பிளாஸ்டிக் தேவை. இவற்றையெல்லாம் செய்ய ஆரம்பித்தாலே நமக்கு பிளாஸ்டிக் இடையூறு என்பதே தெரியாது என்பதுதான் உண்மை.

அவுட் சோர்சிங்

இதற்குத் தேவையான பிளாஸ்டிக்கைத் தருவதற்கு எனக்கு போதுமான ஆட்களோ, நிறுவனங்களோ, அமைப்புகளோ இல்லை. ஒவ்வொரு வீடுகளிலும் குப்பைகளை மேலாண்மை செய்யும் முறை மாற வேண்டும். அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை தனித்தனியாக சேகரிப்புச் செய்ய வேண்டும். அவ்வாறு இல்லையெனில் வேலையில்லாத் திண்டாட்டத்தை தவிர்ப்பதற்காக நாங்கள் 'அவுட் சோர்ஸிங்' முறையில் இவற்றை சேகரம் செய்து தர வேண்டுகோள் விடுத்துள்ளோம். நமது வீட்டை நாம் சுத்தம் செய்வதுபோன்றே நமது நாட்டையும் நாம் சுத்தம் செய்ய முன் வர வேண்டும். வாய்துலக்கப் பயன்படும் பிரஸ், பயன்படுத்திய பிறகு தூக்கி எறிவதன் மூலமாக சுமார் 1 லட்சம் டன் குப்பை உருவாகிறது. ஆகையால் பிளாஸ்டிக்கை திறமையாகக் கையாள்வதன் மூலம் அதனை ஆக்கப்பூர்வமாக மறு உற்பத்தி பொருளாக்க முடியும் என்பதை அனைவரும் எண்ண வேண்டும். என இவ்வாறு முனைவர் ராஜகோபாலன் வாசுதேவன் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details