சென்னை:இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் (ஐஇசி) சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய சாக்ஷியா, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா என்ற பெயரில் மூன்று புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, அவை ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கம் போராட்டம் நடத்தி வருகின்றன. அந்த வகையில், திமுக வழக்கறிஞர் அணி சார்பாக சென்னை எழும்பூரில் உள்ள இராஜரத்தினம் மைதானம் அருகே உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், உண்ணாவிரத அறப்போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ப.சிதம்பரம் பேசியதாவது, "சில விஷயங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்த சட்டம் எதற்கு? 95 சதவீதம் பழைய பிரிவுகள், பழைய வாசகங்கள், பழைய சொற்கள் அப்படியே புதிய சட்டத்தில் காப்பி அடித்துள்ளனர். இதை அரசு மழுப்புகிறதே தவிர, விவாதத்திற்கு தயாராக இல்லை. 513 பிரிவுகளில் 453 பிரிவுகளை ஏன் மாற்ற வேண்டும்?
என்ன காலனி ஆதிக்கத்தை நீங்கள் எதிர்க்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினார். மேலும், புதிதாக ஒரு பிரிவை சேர்க்க வேண்டும் என்றால் புதிதாக சேர்த்திருக்கலாம். அனைத்து சட்டங்களிலும் எண்களை மாற்றியுள்ளனர். வழக்கறிஞர்கள், நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள் என அனைவரும் மீண்டும் இதனை புதிதாக நினைவு வைக்க வேண்டும்" என்றார்.