சென்னை: பொதுமக்கள் சைபர் கிரைம் மோசடியில் சிக்கி பணத்தை இழந்ததாக இந்தாண்டு, இதுவரை 91 ஆயிரத்து 161 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாநில சைபர் குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சைபர் குற்றங்கள்: அதில், சமூகத்தில் கணினிகளின் பயன்பாடு அதிகரித்து வருவதால் சைபர் கிரைம் குற்றங்கள் ஒரு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் சைபர் குற்றங்களான மென்பொருள் தாக்குதல்கள், இணைய நிதி மோசடிகள், KYC மோசடி, கிரிப்டோகரன்சி மோசடிகள், டிஜிட்டல் கைது போன்றவை மிகவும் அதிகமாக நிகழ்கின்றன.
சைபர் குற்றங்களில் குற்றவாளிகள் யார் என்பது தெரிவதில்லை. இது அரசு வணிக முதல் சாதாரண குடிமக்கள் வரை அனைத்து தரப்பினரையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. இதையடுத்து உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தால் உருவாக்கப்பட்ட CFCFRMS, டிஜிட்டல் வங்கி Credit/Debit card பயன்பாடு, பணம் செலுத்துதல் ஆகியவற்றால் ஏற்படும் நிதி இணைய மோசடிகள் மற்றும் பண இழப்புகளை விரைவாகப் புகாரளிக்க உதவுகிறது.
அவசரக்கால எண்: சைபர் மோசடி தொடர்பாக 108, 112, 1930 ஹெல்ப்லைன் எண்கள் மூலம் விரைவாக CFCFRMS-இல் புகார் செய்வதால், மோசடி குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகள் தாமதமின்றி முடக்கப்பட்டு, மோசடி செய்த பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். இணையப் புகார்களை பதிவு செய்ய பாதிக்கப்பட்டவர்கள் யாரும் நிலையத்திற்குச் செல்ல தேவையில்லை. எந்த நேரமும் தாமதமின்றி புகார்கள் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் அல்லது 1930 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.