தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சேதுபாவாசத்திரத்தில் குளத்துடன் ஒரு சிவன் கோயில் உள்ளது. தற்போது இக்கோயிலில் உள்ள குளத்தில் தாமரைக் கொடி படர்ந்து விரிந்து, ஓரளவு தண்ணீர் உள்ளது. இந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்னர், குளத்திற்குள் வித்தியாசமான 2 உயிரினங்கள் நீந்தி விளையாடுவதை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, அந்த உயிரினங்கள் காலை மற்றும் மாலை வேலையில் குளத்தின் திட்டுகளில் அமர்ந்து ஓய்வெடுப்பதையும் கண்டுள்ளனர். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதியைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் சாகுல்ஹமீது, கிராம மக்களுடன் இணைந்து வனத்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
அந்த தகவலின் அடிப்படையில், அக்கிராமத்திற்குச் சென்று கண்காணிக்குமாறு மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி உத்தரவிட்டதன் பேரில், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரன், வனவர் சிவசங்கர் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் கோயில் குளத்தை கண்காணித்தனர்.