கோ.நம்மாழ்வர் மற்றும் நெல் ஜெயராமன் நினைவாக கும்பகோணம் இயற்கை உணவுத் திருவிழா தஞ்சாவூர்:இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் ஆகியோரின் நினைவு தினத்தையொட்டி, அவர்களின் எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுக்கும் நோக்கில், தொடர்ந்து 4ம் ஆண்டாக கும்பகோணத்தில் நேற்று (மார்ச் 3) இயற்கை உணவுத்திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெற்றது.
பொதுமக்களிடையே இயற்கை உணவு பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அங்கு மரபு விதைகள், பாரம்பரிய நெல் ரகங்கள், அரிசி வகைகள், சிறுதானிய உணவுப்பொருட்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு, அவை விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன.
இன்று மனிதர்கள் பல்வேறு உடல்நல பாதிப்பிற்கும், நோய் நொடிகளுக்கும் ஆளாகி அவதியுறுவதற்கு காரணம் வேளாண்மையில் பயன்படுத்தும், பூச்சிக்கொல்லி மருந்துகள், உற்பத்தியை அதிகரிக்க பயன்படுத்தும் வேதியல் கலப்பு, ரசாயன மருந்துகள் ஆகியவைதான். இதுதான் இன்றைய பல்வேறு வகையான நோய் நொடிகளுக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது.
எனவே நெல் ஜெயராமன், இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் ஆகியோர் காட்டிய வழியில், நாம் அனைவரும் இயற்கை வேளாண்மை முறையை கடைபிடிக்கவும், அதன்வழியாக கிடைக்கும் பொருட்களான நஞ்சில்லா உணவுகளையே, பொதுமக்களும் வாங்கி பயன்படுத்தி, இயற்கையோடு ஒன்றி, ஆரோக்கியமாக வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கோடு, கும்பகோணத்தில் இந்த இயற்கை உணவுத்திருவிழா மற்றும் கண்காட்சி நடத்தப்பட்டது.
அந்த வகையில், 4ம் ஆண்டாக இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் திருவிழா மற்றும் கண்காட்சி, கும்பகோணம் பச்சையப்பா தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நமது பாரம்பரிய அரிய நெல் வகைகளான யானை கவுனி, கருப்பு கவுனி, சிகப்பரிசி உள்ளிட்டவையும், சீரக சம்பா, பல்வேறு வகையான அவுல்கள், நவதானிய உருண்டைகள், சிறுதானிய உணவு பொருட்கள் என நஞ்சில்லாத உணவு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன.
மேலும் முறுக்கு, தேன் நெல்லி, கமர்கட்டு, தானிய உருண்டை வகைகள், நாட்டுச்சர்க்கரை, கத்தாழை சோப், வேப்பிலை சோப், மஞ்சள் சோப், சுண்டல் மசால், கொள்ளு சூப், கத்திரி, வெண்டை, பாகற்காய், புடலை, மிளகாய், முள்ளங்கி, மண்பாண்டங்கள் உள்ளிட்ட பலவிதமான பரம்பரியமிக்க மரபு காய்கறி விதைகளும் காட்சிப்படுத்தப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தஞ்சை கோ.சித்தர், தஞ்சை சாஸ்திரா பல்கலைகழக பேரா.முனைவர் சத்யா, விதைத்தீவு திருப்பூர் ப்ரியா ராஜ்நாராயணன், கோவை ஹீலர் பாஸ்கர், சிதம்பரம் ஞான சுந்தரபாண்டியன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில், கரைக்காலைச் சேர்ந்த விவசாயிகள் பாஸ்கர் மற்றும் ராஜீவ் ஆகிய இருவருக்கும் கோ.நம்மாழ்வார் விருதும், பணங்காட்டாங்குடி விவசாயிகள் மு.வீராசாமி, ஆவூர் மரு.பாலசுப்பிரமணியன் ஆகிய இருவருக்கும் நெல் ஜெயராமன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான இயற்கை வேளாண் பொருட்கள் ஆர்வலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இதையும் படிங்க:போலியோ சொட்டு மருந்து முகாம்; 98.18 சதவீதம் பேர் பயனடைந்தனர்.. விடுபட்டவர்களுக்கு பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு!