நீலகிரி:உதகையை அடுத்துள்ள முள்ளிக்கரை பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் 'அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லம்' செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் ஆதரவற்றவர்கள், குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள் என 54 ஆண்கள், 33 பெண்கள் உள்பட 87 பேர் உள்ளனர்.
உதகை நகராட்சிக்குச் சொந்தமான கட்டடத்தில் இயங்கிவரும் இந்த ஆதரவற்றோர் இல்லத்திற்கு, நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.40 ஆயிரம் நிதி வழங்கப்படுகிறது. மேலும், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பாக பொருளுதவி மற்றும் பண உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே இந்த ஆதரவற்றோர் காப்பகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார் எழுந்து வந்த நிலையில், அது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனையடுத்து, இது குறித்து மாவட்ட ஆட்சியரிடமும் புகார் மனு அளிக்கப்பட்டது. இதனைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், ‘இந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க 3 நபர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் விசாரித்து ஒரு வார காலத்தில் அறிக்கை அளிப்பார்கள்’ என தெரிவித்தார்.