நீலகிரி: தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களில் மிகவும் பிரபலமான பகுதி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகள். தமிழ்நாட்டில் 'மலைகளின் அரசி' என கருதப்படும் ஊட்டி, அதிக சுற்றுலாப் பயணிகள் வரும் சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது.
குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், கோடை சீசனில் நடைபெறும் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்ளிட்டவற்றைக் கண்டு ரசிக்கவும், தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகைபுரிவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், கோடை சீசனை முன்னிட்டு, ஊட்டி பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்களில் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக, உலக பிரசித்தி பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள புல்வெளி மைதானம், ஆசியாவிலேயே பெரிய புல்வெளி மைதானமாக கருதப்படுகிறது. தற்போது இந்த புல்வெளி மைதானங்களை பனியில் இருந்து பாதுகாக்கும் வகையில், தண்ணீர் பாய்ச்சி பராமரிக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.