சென்னை:தமிழக சட்டப்பேரவையில் இன்று 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் உள்ள கிராமங்களில் மறுமலர்ச்சி ஏற்படுத்திடும் வகையில், "ஒரு கிராமம் ஒரு பயிர்" என்ற புதிய திட்டம் 15 ஆயிரத்து 280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் ஒரு கிராமத்திற்கு ஒரு பயிர் என ஐந்து முதல் பத்து ஏக்கர் பரப்பில், நெல், சோளம், மக்காச்சேளம், கம்பு, குதிரைவாலி, கேழ்வரகு, துவரை, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, எள், சூரியகாந்தி, பருத்தி, கரும்பு போன்ற முக்கியப் பயிர்களுக்கான நிலம் தயாரிப்பு, உயர் விளைச்சல் ரகங்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.