தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுபான குடோனில் ரெய்டு.. லட்சக் கணக்கில் சிக்கிய பணம்.. லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி! - DVAC TASMAC Godown raid - DVAC TASMAC GODOWN RAID

தூத்துக்குடி - மதுரை பைபாஸ் சாலை பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான குடோனில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ஒன்றரை லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம்
பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2024, 10:03 AM IST

தூத்துக்குடி:தூத்துக்குடி - மதுரை பைபாஸ் சாலையில் சிப்காட் வளாகம் அமைந்துள்ளது. இங்கு, தமிழ்நாடு மாநில வாணிப கழகம்(TASMAC) மதுபான குடோன் மற்றும் மண்டல மேலாளர் அலுவலகம் உள்ளது. இங்கு மதுபான ஆலைகளில் இருந்து மதுபானங்கள் லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டு பின்னர் டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு மதுபான ஆலைகளில் இருந்து மதுபானங்கள் கொண்டு வரும்போது மண்டல மேலாளர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்காக ஒரு குறிப்பிட்ட தொகை மதுபான ஆலைகள் மூலம் கமிஷனாக கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், இவ்வாறு கிடைக்கும் தொகையை மாத இறுதியில் மண்டல மேலாளர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களுக்குள் பங்கு வைத்துக் கொள்வதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர் பால் துரை தலைமையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தமிழ்நாடு மாநில வாணிப கழக மண்டல மேலாளர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: உடற்கல்வி, இயற்கை விவசாயம் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி.. சமூகத்துக்கு பாடமாக திகழும் அரசுப் பள்ளி ஆசிரியர்!

முதலில் அங்கிருந்த ஊழியர்கள் அனைவரின் செல்போனையும் வாங்கிய லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதை சுவிட்ச் ஆப் செய்ய சொல்லிவிட்டு சோதனை மேற்கொண்டனர். அப்போது மண்டல மேலாளர் அலுவலகத்தில் பணிபுரிந்த ஊழியர்களான லட்சுமணன் மற்றும் மகேஷ் ஆகியோரிடம் சோதனை செய்ததில் கணக்கில் வராத ரூபாய் ஒன்றரை லட்சம் ரூபாய் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கணக்கில் வராத பணம் ரூ.1.5 லட்சத்தை பறிமுதல் செய்ததுடன் பணத்தை வைத்திருந்த ஊழியர்கள் லட்சுமணன் மற்றும் மகேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் டாஸ்மாக் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து ரூபாய் ஒன்றரை லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அத்துறையை சேர்ந்த ஊழியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details