தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகா சிவராத்திரி; தனக்குத் தானே தலையில் தேங்காய் உடைத்து கொண்ட பக்தர்கள் - ஈரோட்டில் நூதன வழிபாடு

Maha Shivratri: மகா சிவராத்திரியை முன்னிட்டு சத்தியமங்கலம் அருகே அய்யம்பாளையத்தில் பக்தர்கள் தனக்குத் தானே தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

devotees coconut breaking worship
தலையில் தேங்காய் உடைத்து நூதன வழிபாடு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 9, 2024, 9:59 AM IST

தனக்குத் தானே தலையில் தேங்காய் உடைத்து நூதன வழிபாடு

ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள விளாமுண்டி வனப்பகுதியில் உள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் தொட்டம்மா, சின்னம்மா என்றழைக்கப்படும் மகாலட்சுமி, பொம்மையன் பொம்மி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரி அன்று பக்தர்கள் தனக்குத் தானே தலையில் தேங்காய் உடைத்துக் கொள்ளும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அந்தவகையில், இந்தாண்டும் வெகு விமர்சையாக துவங்கிய இவ்விழாவில் கோவை மாவட்டத்தில் உள்ள கல்வீராம்பாளையம், வடவள்ளி, உச்சையனூர், தடாகம், வரப்பாளையம், பன்னிமடை, தீத்திபாளையம், ஓநாய்பாளையம், பூச்சியூர், சுண்டப்பாளையம், தொண்டாமுத்தூர், கெம்பனூர், வன்னிக்காரம்பாளையம், பச்சாபாளையம், பெரியநாயக்கன்பாளையம், கஸ்தூரிபாளையம், கோவிந்தபாளையம், இடிகரை, வீரபாண்டிபுதூர் ஆகிய கிராமங்களிலிருந்து வந்த ஏராளமான பக்தர்கள் அய்யம்பாளையம் கிராமத்தில் முகாமிட்டனர்.

அதனையடுத்து நேற்று (மார்ச் 8) மகாலட்சுமி மற்றும் பொம்மையன் பொம்மி கோயிலில் அலங்காரப் பூஜை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர், தாரை தப்பட்டை முழங்க 3 ஆலயங்களிலும் சாமி முன்பு வைக்கப்பட்டுள்ள தேங்காய்களை எடுத்த பக்தர்கள், கோயிலின் வெளியே வந்து தலையில் உடைத்து வழிபாடு நடத்தினர். இதைத்தொடர்ந்து காலை வரை அனைவரும் கண்விழித்திருந்து மகா சிவராத்திரி விழாவை சிறப்பாகக் கொண்டாடினர்.

தமிழ்நாட்டில் பல்வேறு கிராமங்களில் நடைபெறும் கோயில் திருவிழாக்களில், தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். ஆனால் பக்தர்கள் முன்கூட்டியே வேண்டிக் கொண்டு செலுத்தும் நேர்த்திக்கடனில், கோயில் பூசாரியோ அல்லது தேங்காய் உடைக்க எனத் தேர்வு செய்யப்பட்ட நபர்களோ, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைப்பது வழக்கமான ஒன்று.

ஆனால் அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை சாமியை வேண்டிக்கொண்டு தனக்குத் தானே தலையில் தேங்காயை உடைத்து நூதன முறையில் வழிபாடு நடத்துகின்றனர். மேலும் அப்படித் தலையில் உடைக்கப்படும் தேங்காய்களை அங்குக் கூடியிருக்கும் மக்கள் அதனைப் பிரசாதமாக நினைத்து எடுத்துக் கொள்கின்றனர். இந்த திருவிழாவைக் காண அவ்வூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த வழிபாடு குறித்து அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கிராமப் பெரியவர்கள் கூறுகையில், "தலையில் தேங்காய் உடைத்து வழிபட்டால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நோய் நொடிகள் அண்டாமல் காப்பாற்றுவதாகவும், அதே சமயம் தவறு செய்தவர்கள் தேங்காய் உடைத்தால் தலையில் வலி ஏற்படுமெனவும், ஆண்டுதோறும் தலையில் தேங்காய் உடைத்து குலதெய்வத்தை வழிபடுவதால் குழந்தை பாக்கியம் மற்றும் நினைத்தது நிறைவேறுவதாகவும்" தெரிவித்தார்.

இதையும் படிங்க: வயநாடு தொகுதியில் மீண்டும் ராகுல் காந்தி.. காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details