திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று (ஜூலை 2) அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஆப்பரேட்டர்கள் சங்கத்தின் சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஆப்பரேட்டர்கள் சங்க தலைவர் ஜெயபாண்டியன் செய்தியாளர் சந்திப்பு (CREDITS- ETV BHARAT TAMIL NADU) இந்த கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், முக்கியமாக வெளி மாநிலப் பேருந்துகளை உள் மாவட்டங்களில் இயக்குவது குறித்து பேசப்பட்டது. சமீபத்தில் தமிழக அரசு வெளி மாநில பேருந்துகளை உள் மாவட்டங்களில் இயக்குவதற்கு தடை உத்தரவு பிறப்பித்தது. அதற்கான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சூழலில், அதுகுறித்து தீர்ப்பு வராத நிலையில், தமிழகத்தில் வெளி மாநில பேருந்துகளை இயக்கும் போது அதிகாரிகள் தொந்தரவு அளிப்பதாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சங்கத்தின் தலைவர் ஜெயபாண்டியன் கூறுகையில், “ஆம்னி பேருந்துகள், திருவிழா போன்ற நேரங்களில்தான் விலை உயர்த்தப்படுகிறது, அதற்கு காரணம் அரசு வசூலிக்கும் வரிதான். நாங்கள் பல முறை தனியார் ஆம்னி பேருந்துகளுக்கென அரசு ஒரு கிலோ மீட்டருக்கு இவ்வளவு என கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் எனக் கூறி கோரிக்கை வைத்தோம்.
ஆனால் அரசு அதை செய்து தரவில்லை. அப்படி செய்திருந்தால் இப்போது எந்த ஒரு இடையூறும் இருந்திருக்காது. மேலும், வெளி மாநிலத்திற்குச் செல்லும் பேருந்துகளை அதிகாரிகள் தொடர்ந்து தொந்தரவு செய்து வருகின்றனர். இந்த நிலை நீடித்தால் நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:அரியலூர் அண்ணா பல்கலை உறுப்புக் கல்லூரி முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பேராசிரியர்கள்!