சென்னை: ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து 157 பேருடன் வந்த ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை விமான நிலைய ஓடுபாதையில் ஓடிய போது திடீரென விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விமானியின் சாமர்த்தியத்தால் விமானத்தில் பயணம் செய்த 157 பயணிகள் உயிர் தப்பியுள்ளனர்.
ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்த ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 148 பயணிகள் 9 விமான ஊழியர்கள் என மொத்தம் 157 பேருடன் சென்னைக்கு வந்துள்ளது. நேற்று (அக்.05) பிற்பகல் 2 மணி அளவில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கி, ஓடு பாதையில் விமானம் ஓடிக்கொண்டிருந்த போது விமானத்தின் பின் பக்கத்தில் இடது பக்க டயர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது.
இதனால், விமானத்தில் அதிர்வுகள் ஏற்பட்டதால், விமானத்துக்குள் இருந்த பயணிகள் பயந்து அலறியுள்ளனர். ஆனால், விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு, விமானத்தை பாதுகாப்பாக ஓடுபாதையில் நிறுத்தியுள்ளார். இதையடுத்து, விமான பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சென்னை விமான நிலைய கிரவுண்ட் ஸ்டாப் எனப்படும் தரை தள பணியாளர்கள், ஓடு பாதையில் நின்ற விமானத்தை இழுவை வண்டிகள் மூலமாக இழுத்து வந்து விமானங்கள் நிற்கும் பகுதியில் நிறுத்தியுள்ளனர்.
அதன் பின்னர், பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு, வழக்கமான குடியுரிமை சுங்க சோதனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கு இடையே விமான நிலைய பொறியாளர்கள் குழுவினர் டயர் வெடித்து பழுதடைந்த ஓமன் ஏர்லைன்ஸ் விமானத்தின் டயரை மாற்றி சீர் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.