தஞ்சாவூர்:பாபநாசம் தாலுகா மெலட்டூர் அருகே உள்ள நெய்தலூர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதாம்பாள் (65). இவர் அப்பகுதி பெண்கள் சிலருடன் சேர்ந்து வயலில் களை பறிப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது ஒரு வயலில் களை பறித்து விட்டு, அடுத்த வயலுக்கு களை பறிப்பதற்காக ஜெகதாம்பாள் சென்றுள்ளார்.
அப்போது வயல்வெளி வழியாகச் சென்ற ஜெகதாம்பாள், அங்கு அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை எதிர்பாராத விதமாக மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதைப் பார்த்த சக தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து மின்சார வாரியத்திற்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்சார ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்துள்ளனர். மேலும், சம்பவ இடத்திற்கு மெலட்டூர் போலீசார் வந்து ஜெகதாம்பாள் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதே போல, தென்காசி மாவட்டத்தில் ஏழாம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சங்கரன்கோவில் அருகே உள்ள புது சுப்புலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் அபிலேஷ் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு அபிலேஷ் வீட்டின் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, அவர்களின் வீட்டின் அருகே இருக்கும் மின்கம்பத்தை பிடித்ததாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அபிலேஷ் கீழே மயங்கி விழுந்துள்ளார். பின்னர், அந்த வழியே சென்றவர்கள் அபிலேஷை மீட்டு அருகில் உள்ள கரிவலம்வந்தநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு அபிலேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அபிலேஷிற்கு துடிப்பு இல்லாததால், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு, அபிலேஷை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அபிலேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பு? விசாரணையில் இறங்கிய என்ஐஏ! - NIA Investigation