திருநெல்வேலி:திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 30-வது பட்டமளிப்பு விழா இன்று (பிப்.3) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில், பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சி அரங்கில் நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராஜஸ்தான் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் நளினா வியாஸ் கலந்து கொண்டார்.
இந்த விழாவின் தொடக்கமாக ஆளுநர் ஆர்.என்.ரவி, சிறப்பு விருந்தினர் நளினா வியாஸ், துணை வேந்தர் சந்திரசேகர் உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றினார். இதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் நளினா வியாஸ் பட்டமளிப்பு விழா உரையில் பேசியதாவது, “பட்டதாரி இளைஞர்களுக்கு திருநெல்வேலியில் விவசாயம், ஜவுளி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றில் நல்ல வாய்ப்புகள் உள்ளன.
இதேபோல் ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகளின் பல்கலைக்கழகங்களுடன் திறன் ஒப்பந்தம் செய்து இருப்பதால், திறன் மேம்பாட்டிற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, புதிய யோசனைகளை முயற்சிகளாக்கி முற்போக்கு சிந்தனைகளோடு வெற்றி பெற வேண்டும். உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் வாய்ப்புகள் உள்ளதால், தன்னம்பிக்கையோடு பிற்போக்கு சிந்தனை இல்லாமல் செயல்பட வேண்டும்.
மாணவர்கள் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் விதமாக, இந்தியாவில் 20 பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்ப பயிற்சி மையங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இரும்பு எஃகு, ஜவுளி உள்ளிட்ட துறைகளில் தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொள்ள இது உதவும்” என்றார். இதனைத் தொடர்ந்து ஆராய்ச்சி படிப்பில் பட்டம் வென்ற 351 மாணவர்களும், தங்கப் பதக்கம் பெற்ற 108 மாணவர்களும் என 459 பேர் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் நேரடியாக பட்டத்தைப் பெற்றுக் கொண்டனர்.
இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தமாக 40 ஆயிரத்து 622 மாணவர்கள் பட்டங்களை பெற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வில் உயர் கல்வித்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான ராஜகண்ணப்பன் கலந்து கொள்வதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற அழகப்பா பல்கலைக்கழக விழாவிலும் அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.