சென்னை: ''அதிமுக ஆட்சியின்போது அதானி நிறுவனம் தமிழக மின்சார வாரியத்திடம் வழங்கிய 3,500 கலோரி தரம் குறைந்த நிலக்கரி குறைவான மின்சாரத்தையே உற்பத்தி செய்யும் என்பதால், அதிகளவு நிலக்கரியை எரிக்க வேண்டிய நிலை உருவாகியிருக்கும். இதனால் இந்த நிலக்கரி பயன்படுத்தப்பட்ட அனல்மின் நிலையங்களைச் சுற்றி வாழும் மக்கள் காற்று மாசுபாடால் இரண்டு மடங்கு பாதிப்படைந்திருப்பார்கள்'' என ஓசிசிஆர்பி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
அதானி நிலக்கரி ஊழல் குறித்து ஓசிசிஆர்பி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜனவரி 9, 2014 அன்று, இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரி ஏற்றிக் கொண்டு இரண்டு வார பயணத்திற்குப் பிறகு ''MV Kalliopi L'' என்ற சரக்கு கப்பல் எண்ணூர் துறைமுகத்துக்கு வந்துள்ளது.
அதிலிருந்து தமிழ்நாடு மாநில மின் நிறுவனத்திற்கு 69,925 டன் நிலக்கரி விற்கப்பட்டுள்ளது. ஆனால், சரக்குகளுக்கான ஆவணங்களில், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் மற்றும் சிங்கப்பூர் வழியாக அதிக சுற்றுப்பாதையில் சென்றதாக காட்டப்பட்டு ,நிலக்கரியின் விலையை அதானி நிறுவனம் மூன்று மடங்காக உயர்த்தி விற்றுள்ளது.
ஒரே நிலக்கரிக்கு பல விலை பட்டியல்கள்:இந்தோனேசியாவில் இருந்து ஏற்றுமதி செய்யும்போது ஒரு மெட்ரிக் டன் 28 டாலர் என்ற விலையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதானி குழுமம் கொண்டு வந்த நிலக்கரி தமிழக மின்சார வாரியத்துக்கு கிடைப்பதற்கு முன்பு கொள்முதல் செய்யப்பட்ட நிலக்கரிக்கான ஏற்றுமதி ஆவணங்கள் ''சுப்ரீம் யூனியன் இன்வெஸ்டர்ஸ் லிமிடெட்'' என்ற நிறுவனத்தின் இடைத்தரகர் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், நிலக்கரி ஒரு மெட்ரிக் டன்னுக்கு 33.75 டாலர்கள் என இருந்துள்ளது. இந்த விலையுடைய நிலக்கரியானது 3,500 கிலோ கலோரிகளையே உற்பத்தி செய்யும் எனவும் வெளியிட்டு இருந்தது. பின்னர், அதானி குழுமம் ஒரு மாதத்திற்குப் பிறகு ஏற்றுமதிக்கான விலைப் பட்டியலை தமிழ்நாடு மின்சார வாரிய நிறுவனத்துக்கு வழங்கியபோது, விலைப் பட்டியல் மாற்றப்பட்டு ஒரு மெட்ரிக் டன்னுக்கு 91.91 டாலராக உயர்த்தியது. மேலும், நிலக்கரியின் கலோரிஃபிக் மதிப்பு 6,000 என பட்டியலிடப்பட்டு இருந்தது. 6,000 கலோரிஃபிக் என்பது உயர்தர நிலக்கரியாகும்.
இந்தியாவின் வருவாய் மற்றும் புலனாய்வு இயக்குனரகம் இந்த நிலக்கரி ஏற்றுமதி இறக்குமதி குறித்து செய்யப்பட்ட சோதனையில் அதானி குழுமத்தின் வங்கி ஆவணங்கள் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி ஆவணங்கள் போன்ற அனைத்து தரவுகளையும் சோதனை செய்தது. இதில் நிலக்கரி சப்ளையர் ஜான்லின் நிறுவனத்தில் இருந்து கிடைத்த ஆவணங்கள் மற்றும் தமிழக மின்சார வாரியத்திடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்கள் உட்பட பல ஆதாரங்களில் இருந்து பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதன்படி, 2012 முதல் 2016 வரை அதானி குளோபல் பிரைவேட் லிமிடெட், நாலெட்ஜ் இன்டர்நேஷனல் ஸ்ட்ரேடஜி சிஸ்டம்ஸ், செட்டிநாடு லாஜிஸ்டிக்ஸ், எம்எம்டிசி ஆகியவற்றில் இருந்து மொத்தம் 2.44 கோடி டன்கள் நிலக்கரியை மின் உற்பத்தி நிலையங்களுக்காக இறக்குமதி செய்துள்ளது.
அனல்மின் நிலையங்கள் இந்த நிலக்கரியை எரித்தபோது, ஒரு கிலோவிற்கு வெறும் 3,000 கிலோ கலோரியை மட்டுமே கொடுத்துள்ளது. ஆனால், அதானி குழுமத்திடம் இருந்து வாங்கிய நிலக்கரியானது ஒரு கிலோவிற்கு 6,000 கிலோ கலோரியை கொடுக்கும் என்று கூறப்பட்டிருந்தது. இதனை தரம் மிகுந்த நிலக்கரி என்று கூறி, தமிழக மின் வாரியத்துக்கு வழங்கி அதானி குழுமம் ஏமாற்றி இருப்பதாக ஓசிசிஆர்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.