தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘துரோகம்’ தியாகத்தைப் பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது - ஈபிஎஸ்-க்கு ஓபிஎஸ் பதிலடி! - OPS CRITICIZED EPS

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘துரோகம்’ தியாகத்தைப் பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது என்று விமர்சித்துள்ளார்.

ஓ. பன்னீர் செல்வம்,  எடப்பாடி பழனிச்சாமி
ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2024, 3:31 PM IST

சென்னை:நடிகரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் தொடங்கிய அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 53வது ஆண்டு விழா அதிமுகவினரால் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும், 2026இல் அதிமுக ஆட்சி அமைந்திடுவதை தடுக்க முடியாது என்றும், அதற்கு எந்த ஒரு தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

எம்.ஜி.ஆர். தலைமையில் 3 முறை ஆட்சி: இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எம்.ஜி.ஆர், தமிழ்நாட்டு மக்களுக்கு பொற்கால ஆட்சியை அளிக்க வேண்டும் என்பதற்காக துவங்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கமாம் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தொடர்ந்து மூன்று முறை எம்.ஜி.ஆர். தலைமையில் ஆட்சி அமைத்தது.

சத்துணவுத் திட்டம், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 31 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்தியது, தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு பல்கலைக்கழகங்களை உருவாக்கியது, இலவச வேட்டி சேலைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியது எனப் பல்வேறு சாதனைகளை அதிமுகவின் நிறுவனர் எம்.ஜி.ஆர். நிகழ்த்திக் காட்டினார்கள்.

ஜெயலலிதா தலைமையில் 4 முறை ஆட்சி: எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு, பல்வேறு தடைகளைத் தகர்த்தெறிந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கழகப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டு, நான்கு முறை தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியை அமைத்தார்கள். தொட்டில் குழந்தைத் திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையம், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், விலையில்லா அரிசி, கட்டணமில்லா கல்வி எனப் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி சாதனை படைத்தார்கள். நாடாளுமன்ற மக்களவையில் அதிமுகவை மூன்றாவது பெரிய கட்சியாக உருவாக்கிய பெருமை ஜெயலலிதாவையே சாரும்.

இதையும் படிங்க:அஇஅதிமுகவுக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வாழ்த்து...இபிஎஸ், ஒபிஎஸ் ஆகியோருக்கும் பாராட்டு!

அதிமுக இன்று வெற்றிடம்: ஜெயலிதாவின் மறைவிற்குப் பிறகு, துரோகம் உள்ளே நுழைந்ததன் விளைவாக, அதர்மங்கள் அதிகரித்து துரோகச் செயல்கள் தாண்டவமாடி, கட்சி அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. அனைவருக்குமான கட்சி என்ற நிலை துரோகக் கூட்டத்தால் குழிதோண்டி புதைக்கப்பட்டதன் காரணமாக, நாடாளுமன்ற மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த அதிமுக இன்று வெற்றிடமாக காட்சியளிக்கிறது.

முதுகில் குத்திய துரோகி:ஏழு மக்களவைத் தொகுதிகளில் டெபாசிட் இழப்பு, 12 தொகுதிகளில் மூன்றாவது இடம், கன்னியாகுமரியில் நான்காவது இடம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நான்காவது இடம் என படுதோல்வியை நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அனைத்திந்திய அதிமுக சந்தித்தது. இதன்மூலம், முதலமைச்சர் பதவிக்கு பரிந்துரைத்தவர், முதலமைச்சர் பதவியில் அமர்த்தியவர், முதலமைச்சர் பதவியில் தொடர துணை புரிந்தவர்கள் என அனைவரையும் முதுகில் குத்திய துரோகியை மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பது தெளிவாகிறது.

வாக்கு வங்கி குறைவு: இந்தத் துரோகச் செயல் காரணமாக, ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் 45 விழுக்காடாக இருந்த வாக்கு வங்கி, இன்று 20 விழுக்காடாக குறைந்துவிட்டது. இப்படிப்பட்ட ‘துரோகம்’ தியாகத்தைப் பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது. இந்த நிலைமை நீடித்தால், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதிமுக ஆட்சி அமைக்க முடியாது என்பதோடு மட்டுமல்லாமல், அதன் வாக்கு சதவீதம் குறைந்து கொண்டே செல்லும். வெற்றிக் கனி என்பது எட்டாக் கனியாகிவிடும்.

அதிமுக ஒன்றிணைய வேண்டும்:அதிமுக வீறுகொண்டு எழ வேண்டுமென்றால், பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும். பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டுமென்றால் பண்புள்ளவர்கள் தலைமைப் பதவிக்கு வர வேண்டும். எப்படிப்பட்ட பாவத்தைச் செய்தவர்க்கும் அதிலிருந்து தப்பிக்க வழி உண்டு. செய் நன்றி மறந்த பாவத்திலிருந்து விடுபட வேறு மார்க்கம் இல்லை என்கிறார் திருவள்ளுவர்.

எனவே, ‘எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அதிமுக மக்களுக்காகவே இயங்கும்’ என்ற ஜெயலலிதாவின் எண்ணத்தை நிறைவேற்றிட, 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து களப் பணியாற்றி அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க உறுதி ஏற்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details