பாதிக்கப்பட்ட பெண் அளித்த பேட்டி (Credits to ETV Bharat Tamil Nadu) சென்னை:வளசரவாக்கம் காவல்நிலையத்தில் காவலராகப் பணியாற்றும் தம்பிதுரை என்பவர், திருமண ஆசை கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்துள்ள வளசரவாக்கத்தைச் சேர்ந்த செவிலியர், இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சருக்கு இன்று (மே 8) கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தம்பிதுரையும், நானும் 3 மாதங்களாக காதலித்தோம். அவருக்கு திருமணம் ஆகவில்லை என்று என்னிடம் கூறியிருந்தார். மேலும், என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, நம்பிக்கை அளித்து என்னுடன் உறவு வைத்துக்கொண்டார்.
அதுமட்டுமின்றி, சுமார் 2 லட்சத்திற்கும் மேல் பணத்தை செலவு செய்ய வைத்தார். ஒரு கட்டத்தில் அவருக்கு திருமணம் ஆன தகவல் எனக்கு தெரியவந்தது. இதனால் எங்கள் இருவருக்கும் இடையே சண்டை எழுந்தது. இதுகுறித்து நான் கடந்த ஜனவரி மாதம் போலீசில் புகார் அளித்தேன்.
புகாரின் அடிப்படையில் காவலர் தம்பிதுரை கைது செய்யப்பட்டார். ஆனால், தன் மீது அளித்த புகாரை திரும்பப் பெற்றால் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வதாக எனக்கு நம்பிக்கை அளித்து, புகாரை திரும்பப் பெற வைத்தார்.
மேலும், தான் கூறுவது போல நீதிமன்றத்திலும் கூற வேண்டும் என என்னை மூளைச்சலவை செய்து நீதிமன்றத்தில் பேச வைத்தார். அதன் பின்னர், அவர் பிப்ரவரி மாதம் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு, மீண்டும் பணியில் சேர்ந்தார். ஆனால் எல்லாம் முடிந்த பின்னர், என்னை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று கூறி திட்டி, எனது கழுத்தை நெறித்து தாக்கவும் செய்தார்.
இவ்வாறாக எனக்கு மிகுந்த மன உளைச்சலை அளிப்பதுடன், தொடர்ந்து மிரட்டியும் வருகிறார். தான் ஒரு போலீஸ் என்பதால், தன்னை ஒன்றும் செய்ய முடியாது எனக் கூறி மிரட்டுகிறார். போலீசாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? இது தொடர்பாக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னைப் போல இனி எந்தப் பெண்ணும் பாதிக்கப்படக்கூடாது” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கஞ்சா போதையில் பெண் வெட்டிக்கொலை.. எண்ணூரை உலுக்கிய சம்பவம்! - Chennai Woman Murder