தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரியில் தொடரும் சட்டவிரோத கருக்கலைப்பு.. வீட்டின் மாடியில் நர்ஸ் செய்த கொடூர சம்பவம்.. சிக்கியது எப்படி? - Nurse Arrested for illegal abortion - NURSE ARRESTED FOR ILLEGAL ABORTION

Dharmapuri Abortion Issue: தருமபுரியில் சட்ட விரோதமாக கருவில் உள்ள சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து, பெண் குழந்தை என்றால் வீட்டிற்கே சென்று கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்த செவிலியரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருக்கலைப்பில் ஈடுபட்ட செவிலியர் கைது தொடர்பான கோப்புப்படம்
கருக்கலைப்பில் ஈடுபட்ட செவிலியர் கைது தொடர்பான கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2024, 12:37 PM IST

தருமபுரி:தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள கிட்டனஅள்ளி பகுதியில், கர்ப்பிணிப் பெண்களுக்கு சட்ட விரோதமாக கருவின் பாலினம் கண்டறிந்து, பெண் குழந்தைகளை கருக்கலைப்பு செய்வதாக, மாவட்ட ஆட்சியர் சாந்திக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அளித்த உத்தரவின் பேரில், நேற்று இரவு 10 மணிக்கு ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் சாந்தி தலைமையில் மருத்துவர் பாலசுப்ரமணியம், மருந்தாளுநர் முத்துசாமி உள்ளிட்ட குழுவினர் கிட்டனஅள்ளி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக கர்ப்பிணிப் பெண்ணை ஒரு பெண் அழைத்துச் செல்வது தெரிய வந்துள்ளது. சிறிது நேரம் அவர்களை மறைந்திருந்து கண்காணித்த மருத்துவ குழுவினர், அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்தனர். அப்போது, கர்ப்பிணிப் பெண்ணுக்கு சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்வதற்காக கர்ப்பப் பையில் கருக்கலைப்பு மாத்திரை வைக்கப்பட்டிருந்ததும், மாத்திரை வேலை செய்ய சுமார் 5 மணி நேரம் ஆகும் என்பதால் காத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

கருக்கலைப்பில் ஈடுபட்ட செவிலியரை மருத்துவக்குழுவினர் பிடித்த வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

அதைத் தொடர்ந்து, உடனடியாக பெண்ணின் கர்ப்பப்பையில் வைக்கப்பட்ட மாத்திரையை மருத்துவக் குழுவினர் அப்புறப்படுத்தினர். பின்னர், அவர்களை கையும் களவுமாகப் பிடித்த இணை இயக்குநர் மருத்துவர் சாந்தி தீவிர விசாரணை மேற்கொண்டார்.

அந்த விசாரணையில், பெங்களூரைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், திருப்பத்தூரில் கருவின் பாலினம் கண்டறியும் கும்பலிடம் ஸ்கேன் செய்த போது, மீண்டும் பெண் குழந்தை எனக் கூறியதால், கருக்கலைப்பு செய்ய முயன்றதும் தெரிய வந்தது.

மேலும், இதில் கருவின் பாலினம் கண்டறிய ரூ.15 ஆயிரம் மற்றும் கருக்கலைப்பு செய்ய ரூ.30 ஆயிரமும் பெற்றதாக கூறப்படுகிறது. தற்போது, கருக்கலைப்பு செய்ய முயன்ற கர்ப்பிணிப் பெண் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, சட்ட விரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியை அடுத்த குள்ளப்பநாயக்கனூரைச் சேர்ந்த சித்ராதேவி(42) என்பவரை பிடித்து, பாப்பாரப்பட்டி போலீசாரிடம் மருத்துவக் குழுவினர் ஒப்படைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, சித்ராதேவியிடம் நடத்திய விசாரணையில், செவிலியர் படித்துவிட்டு, தனியாக கிளினிக் நடத்துவதாக கர்ப்பிணிகளுக்கு விசிட்டிங் கார்டு கொடுத்து கருக்கலைப்பு செய்ய வரவழைத்துள்ளார். அதுமட்டுமின்றி, தருமபுரி மாவட்டத்தில் வேறு இடத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு கருக்கலைப்பு செய்துவிட்டு, பெங்களூரைச் சேர்ந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், சித்ராதேவி சட்ட விரோதமாக கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து சொல்லும் கும்பலுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, இதுபோல வீடுகளுக்கே சென்று கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். அதைத் தொடர்ந்து, சித்ராதேவியை கைது செய்த பாப்பாரப்பட்டி போலீசார், மேலும் இதில் தொடர்புடையவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை தருமபுரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து சொல்லும் கும்பல்கள் மட்டுமே பிடிக்கப்பட்டு வந்த நிலையில், முதல்முறையாக கருக்கலைப்பு செய்யும் நபரை பிடித்துள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள சித்ராதேவி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை கடத்தி விற்பனை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 3 மாதத்தில் மட்டும் கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து சொல்லும் 3 கும்பல் கைது செய்யப்பட்டு, அதில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனால், இதுபோன்று சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட ஆட்சியர் சாந்தி எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அதனையும் பொருட்படுத்தாமல், இரவில் வீட்டிற்கே சென்று கருக்கலைப்பில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைதான சிவராமன் உயிரிழப்பு.. தந்தை விபத்தில் இறந்த சோகம்!

ABOUT THE AUTHOR

...view details