சென்னை: கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சியின் சார்பாக சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
போராட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து சீமான் கூறியதாவது, "கொல்கத்தா பயிற்சி மருத்துவர் வழக்கு கூட்டு வன்கொடுமை என்று அனைவருக்கும் தெரிகிறது. இதில் ஒருவரை மட்டும் கைது செய்து வழக்கை இழுத்துக் கொண்டு போவது தான் வேடிக்கையாக இருக்கிறது. திட்டமிட்ட வன்புணர்வு இது. கல்லூரியின் முதல்வர் இதை தற்கொலை என்று ஏன் சொல்கிறார், அதற்கான அவசியம் என்ன?
இந்த நாட்டில் நடக்கிற 100 குற்றங்களில் 99 குற்றங்கள் போதையில் தான் நடக்கின்றன. ஆம்ஸ்ட்ராங் கொலையிலும் போதையினால் மட்டுமே வெட்டி இருக்க முடியும். இதுவரை பெற்ற தீர்வுகள் எல்லாமே போராடி பெற்றவைதான். தானாக எதுவும் நடக்கவில்லை. கரோனா காலத்தில் மருத்துவர்கள் தேவதைகளாக தெரிந்தனர். இப்போது அதே மருத்துவர்கள் தேவையற்றவர்களாக தெரிகின்றனர். இதுபோன்ற செயல்களுக்கு வெட்கி தலைகுனிய வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் தொடரக்கூடாது.
கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளியில் என்சிசி கேம்ப் நடத்தி, அதில் பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட சிவராமன் மரணத்தில் எங்களுக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை. சிவராமன் தவறு செய்திருக்கிறார் என்று தெரிந்தவுடன், அவரை காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்ததே நாம் தமிழர் கட்சி தான். குற்ற உணர்ச்சி ஏற்பட்டிருப்பதால் அவர் இறந்திருக்கிறார்.