தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ஐபிஎஸ் வருண்குமார் ஒன்றும் அவ்வளவு பெரிய ஆளில்லை" - சீமான் காட்டம் - SEEMAN

தான் சென்று மன்னிப்பு கேட்கும் அளவுக்கு ஐ.பி.எஸ்.அதிகாரி வருண்குமார் ஒன்றும் பெரிய ஆளில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக கூறியுள்ளார்.

வருண்குமார் ஐபிஎஸ், சீமான்
வருண்குமார் ஐபிஎஸ், சீமான் (Credits - ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 31, 2024, 10:48 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் இன்று காலை, வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் போராட்டம் நடத்த காவல் துறை அனுமதி மறுத்ததால், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட முயன்ற சீமானும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் சென்னை பெரியமேட்டில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் மாலையில் விடுக்கப்பட்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறும்போது,"இதைவிட கடுமையான வழக்குகளில் காவல்துறை விசாரிக்கவில்லையா? பெண்கள் படிக்கும் இடத்திற்கு சென்று மிரட்டி குற்றம் செய்யும் துணிவு எப்படி வருகிறது? இதற்கு முன்பு சிசிடிவி கேமிரா இருந்ததா? சிசிடிவி இல்லாத காலத்திலும் காவல்துறை திறமையாக துப்பு துலக்கவில்லையா?

எதிர்க்கட்சியாக இருந்தபோது இதுபோன்ற பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்த தி.மு.க. இப்போது என்ன ஆனது? பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கப்படவில்லை. துணைவேந்தர் இல்லாமல் பல்கலை கழகங்களை நிர்வகிப்பது எப்படி?

மாநில உரிமைகளை பேசும் தி.மு.க. துணைவேந்தர்களை நியமிக்கும் உரிமைகளை எப்போதும் பெறும்? இத்தனை ஆயிரம் முதல் தகவல் அறிக்கைகள் பதிவாகும்போது, இந்த அறிக்கை மட்டும் எப்படி வெளியானது. இந்த முதல் தகவல் அறிக்கை வெளியாக மட்டும் எப்படி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது? மத்திய அரசு சொன்னால் மட்டும் நம்பிவிட முடியுமா? எந்த குற்றச்செயல் நடந்தாலும் அந்த இடத்தில் மட்டும் கண்காணிப்பு கேமிராக்கள் இயங்காமல் போகிறது?

நாங்கள் போராடினால் நாடகம், நீங்கள் போராடினால் மட்டும் நியாயமா? நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்து போராடியது எல்லாம் நாடகமா? நீங்களும் நடவடிக்கை எடுக்கமாட்டீர்கள்? எங்களையும் போராட விடமாட்டீர்கள்.
நீங்கள் நேர்மையாக நடவடிக்கை எடுத்திருந்தால் அதில் நம்பிக்கை வரும்.

நான் சென்று மன்னிப்பு கேட்கும் அளவுக்கு ஐ.பி.எஸ்.அதிகாரி வருண்குமார் ஒன்றும் பெரிய ஆளில்லை. நான் மன்னிப்பு கேட்பதாக சொன்ன தொழிலதிபரை கூட்டி வாருங்கள். தவறு செய்தது வருண்குமார் தான்; நான் தவறு செய்யவில்லை. எங்கள் கட்சிகாரர்களின் செல்ஃபோன்களில் இருந்து ஆடியோக்கள் களவாடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன." என்று சீமான் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details