தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விக்கிரவாண்டி பள்ளியில் குழந்தை பலியான சம்பவம் - சிபிஐக்கு மாற்றப்படுமா? - VILLUPURAM

விக்கிரவாண்டி தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம் (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 17, 2025, 3:40 PM IST

சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் கழிவறைக்குச் சென்ற எல்கேஜி மாணவி கழிப்பிட தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். ஜனவரி 3ம் தேதி நடந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உயிரிழந்த் சிறுமியின் தந்தை பழனிவேல் அளித்த புகாரின் அடிப்படையில், பள்ளி தாளாளர், முதல்வர் உள்ளிட்டோருக்கு எதிராக விக்கிரவாண்டி காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடி -க்கு மாற்ற உத்தரவிடக் கோரி பலியான சிறுமியின் தந்தை பழனிவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து பெற்றோருக்கு முறையாக பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவிக்கவில்லை. பள்ளியில் இருந்து 20 மீட்டர் தொலைவில் காவல் நிலையம் இருந்தும், குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. குழந்தை கழிவு நீர் தொட்டியில் விழுந்தது தொடர்பாக எந்த ஆதாரங்களும் இல்லை. குழந்தையின் ஆடை நனையவில்லை. மாறாக, உடையில் ரத்தக்கறை உள்ளது.

பள்ளி நிர்வாகம், கண்காணிப்பு கேமரா காட்சிகளை அழிக்க வாய்ப்புள்ளது. சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பள்ளி நிர்வாகம் மேற்கொள்ளவில்லை. குழந்தையின் உடையில் ரத்தக்கறை இருந்தது குறித்து காவல்துறையிடம் கேட்ட போது, உடையை திருப்பி தரும்படியும், இல்லாவிட்டால் வழக்கை முடித்து வைத்து விடுவதாக காவல்துறை தன்னை மிரட்டியது.

குழந்தை மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளதால், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாதுகாக்கும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ். வினோத்குமார், மனு குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இடைக்கால உத்தரவாக சிசிடிவி காட்சிகளை பாதுகாத்து வைக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்தார். அரசின் விளக்கத்திற்கு பின், விசாரணையை மாற்றுவதை குறித்து முடிவெடுக்கலாம் என தெரிவித்த நீதிபதி, தமிழ்நாடு அரசு, டிஜிபி மற்றும் சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 4ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details