தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு நோட்டீஸ்! - Manjolai estate workers VRS

Manjolai estate workers VRS: மாஞ்சோலை தேயிலை தோட்டத்திற்கான குத்தகை காலம் 2028ஆம் ஆண்டுடன் முடியும் நிலையில் விருப்ப ஓய்வு பெற தொழிலாளர்களுக்கு பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2024, 3:09 PM IST

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் (Credits - ETV Bharat Tami lNadu)

திருநெல்வேலி:அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் தேயிலை எஸ்டேட் (Manjolai Tea Estate) அமைந்துள்ளது. இங்கு 2,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கியிருந்து பணிபுரிகின்றனர்.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு சிங்கம்பட்டி ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்த இந்த இடம், 1929ஆம் ஆண்டு தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்துக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டது. இதனால் காலங்கள் கடந்து பல அரசு நிர்வாக மாற்றங்கள் ஏற்பட்டாலும், அடர்ந்த வனப் பகுதியான மாஞ்சோலையை வனத்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியாமல் இருந்தது.

இது போன்ற நிலையில் தான் சிங்கம்பட்டி ஜமீன்தார் வழங்கிய குத்தகை காலம் வரும் 2028ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது. எனவே, நெல்லை வனத்துறை அதிகாரிகள் மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி ஆகிய பகுதிகளை உள்ள தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர தீவிர முயற்சி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, குத்தகை காலம் முடிய இன்னும் 4 ஆண்டுகள் இருந்தாலும், தற்போது முதலே மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தேயிலை தோட்டத்தில் உள்ள பொருட்களை கீழே கொண்டு வருவதற்கே பல மாதங்கள் தேவைப்படும் என்பதால் தான் முன்னதாகவே தொழிலாளர்களை வெளியேற்றும் பணியில் அரசு தீவிரம் காட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 90 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு பல தலைமுறையாக வசித்து வரும் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதால் கவலையில் மூழ்கியுள்ளனர்.

இதற்கிடையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழக அரசே தேயிலைத் தோட்டத்தை ஏற்று நடத்த வேண்டுமென பல்வேறு அரசியல் தலைவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக, எஸ்டிபிஐ கட்சி சார்பில் அதன் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் சமீபத்தில் அம்பாசமுத்திரம் பகுதியில் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசே ஏற்று நடத்தக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும், முன்னாள் சபாநாயகரும், திமுக மாவட்டச் செயலாளருமான ஆவுடையப்பன் அதே கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார். இது போன்ற நிலையில், மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுப்பதற்கான நோட்டீசை பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம் தற்போது வழங்கி வருகிறது.

அதில், சிங்கம்பட்டி குரூப்பின் வணிகத்தை நிலை நிறுத்தமான முறையில் மேலாண்மை செய்வதற்கு உதவ பிபிடிசி லிமிடெட் வெளிப்படுத்தும் விருப்ப பணி ஓய்வு திட்டம் மூலம் தொழிலாளர்கள் தங்கள் தகுதி அடிப்படையில் பலன்கள் பெற்றுக் கொள்ளும் வகையில் அழைக்கப்படுகிறார்கள். விருப்ப பணி ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய அனைத்து பலன்கள் மட்டுமல்லாது, 2023-24 ஆம் ஆண்டுக்கான கருணைத் தொகையும் போனஸ் தொகையும் வழங்கப்படும்.

மாஞ்சோலை மணிமுத்தாறு மற்றும் ஊத்து எஸ்டேட் அலுவலகத்திலும் தேயிலை தொழிற்சாலை அலுவலகத்திலும் தொழிலாளர்கள் பார்வைக்காக ஜூன் 14ஆம் தேதி வரை விண்ணப்ப படிவம் வைக்கப்படும். தொழிலாளர்கள் தங்கள் விருப்ப ஒய்விற்கான விண்ணப்பத்தை ஜூன் 14ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மாஞ்சோலை தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவது குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக சம்பந்தப்பட்ட தேயிலை எஸ்டேட் நிறுவனம் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு விண்ணப்பத்தை வழங்கி இருப்பதால் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.. சுற்றுலா பயணிகளுக்கான கட்டுப்பாடு என்ன? - PM Modi Kanyakumari Visit

ABOUT THE AUTHOR

...view details