தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு வானிலை: தென்காசியில் அதிகபட்சமாக 26 செ.மீ மழை; 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு! - TAMIL NADU WEATHER

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரத்தின் காரணமாக அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மழை தொடர்பான கோப்புப்படம்
மழை தொடர்பான கோப்புப்படம் (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 6 hours ago

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரமாக உள்ளது. தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

கடனா அணை (தென்காசி) 26 செ.மீ, ஊத்து (திருநெல்வேலி) 23 செ.மீ, நாலுமுக்கு (திருநெல்வேலி) 22 செ.மீ, தூத்துக்குடி விமான நிலையம் 21 செ.மீ, காக்காச்சி (திருநெல்வேலி) 19 செ.மீ ,மாஞ்சோலை (திருநெல்வேலி) 18 செ.மீ, தூத்துக்குடி 16 செ.மீ, ராமநதி அணைப் பகுதி (தென்காசி), கோடியக்கரை (நாகப்பட்டினம்), பாபநாசம் 15 செ.மீ எனும் அளவுகளில் மழை பொழிவு கணக்கிடப்பட்டுள்ளது.

அதேபோல, நீடாமங்கலம் (திருவாரூர்), செங்கோட்டை (தென்காசி), குண்டாறு அணை (தென்காசி), சேர்வலாறு அணை 14 செ.மீ, ஓரத்தநாடு (தஞ்சாவூர்), விருதுநகர், குருங்குளம் (தஞ்சாவூர்) 13 செ.மீ, காயல்பட்டினம் (தூத்துக்குடி) 12 செ.மீ, புள்ளம்பாடி (திருச்சிராப்பள்ளி), சாத்தூர் (விருதுநகர்), சாத்தான்குளம், சிவகாசி (விருதுநகர்) 11 செ.மீ, தேக்கடி (தேனி), அருப்புக்கோட்டை (விருதுநகர்), கல்லிக்குடி (மதுரை) 10 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (டிசம்பர் 15) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

இது மேலும் வலுப்பெற்று, மேற்கு - வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி அதற்கடுத்த இரு தினங்களில் நகரக்கூடும். நேற்று லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (டிச 14) அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு திசையில் நகர்ந்து, வலுவிழக்கக் கூடும்.

டிசம்பர் 14: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

டிசம்பர் 15: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

டிசம்பர் 16: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

டிசம்பர் 17: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஆரஞ்ச் அலர்ட்: நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

மஞ்சள் அலர்ட்: தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க:வடகிழக்கு பருவமழை: திருச்செந்தூர் கோயிலுக்கு வருவதைத் தவிர்க்கவும் - மாவட்ட ஆட்சியர்!

டிசம்பர் 18: தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஆரஞ்ச் அலர்ட்: கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

மஞ்சள் அலர்ட்: மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

டிசம்பர் 19, 20: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

தமிழக கடலோரப்பகுதிகள்:

டிசம்பர் 14 - 16: எச்சரிக்கை ஏதுமில்லை.

டிசம்பர் 17, 18: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

டிசம்பர் 14, 15: அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

டிசம்பர் 14: தெற்கு கேரள கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

டிசம்பர் 15 - 18 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ABOUT THE AUTHOR

...view details