திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சித் தலைவராக உள்ள திமுகவைச் சேர்ந்த செல்வ சுரேஷ் பெருமாள் மீது, திமுக உறுப்பினர்கள் 14 பேர் ஒன்றிணைந்து கையொப்பமிட்ட நம்பிக்கை இல்லா தீர்மான கடிதத்தை நகராட்சி ஆணையர் மகேஸ்வரனிடம் வழங்கி உள்ளனர்.
விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் உள்ள 21 வார்டு உறுப்பினர்களில் இரண்டு வார்டு உறுப்பினர்கள் காலமாகிவிட்ட நிலையில், மீதமுள்ள 19 உறுப்பினர்களுள் அதிமுகவினர் மூன்று பேர் உள்ளனர். இதில் நகர்மன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவரை தவிர்த்து, இதர உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கையொப்பமிட்டு, நகராட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.
அதில், விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் மக்கள் பிரச்னை எதுவாக இருந்தாலும் லஞ்சம் கொடுத்தால் தான் பணி நடைபெறுவதாகவும், எந்த திட்டமிடலும் இல்லாமல் கமிஷன் வாங்கிக்கொண்டு பணிகள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டு நம்பிக்கை இல்லா தீர்மான கடிதத்தை நகராட்சியின் ஆணையரிடம் வழங்கி உள்ளனர்.
முன்னதாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற உள்ளாட்சி மன்றங்களின் திமுக தலைவர்களுக்கு எதிராக, அதே கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் நிலையில், தற்போது நெல்லையில் மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:“ரேஞ்சருக்கு மட்டுமில்ல எங்களுக்கும் கொடுக்கணும்”.. லஞ்சம் வாங்கும் வனத்துறையினர்.. வைரலாகும் வீடியோ!