சென்னை:தமிழ்நாட்டில் குடியிருப்புகள் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவு ஜூலை 1 ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வீடுகளுக்கான மின் இணைப்பில் 400 யூனிட்டுகள் வரை பயன்படுத்தி வருவோருக்கு முன்பு ஒரு யூனிட்டுக்கு 4.60 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த மின்கட்டணம் இனி 4.80 ரூபாயாக பெறப்படும். அதிகபட்சமாக 1000 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோருக்கு ஒரு யூனிட் மின்சாரத்துக்கு 11.25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி 11.80 ரூபாய் வசூலிக்கப்படும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐம்பது யூனிட்டுக்கு மேல் வணிக பயன்பாட்டிற்கான மின் கட்டணம் ஒரு யூனிட் 9 ரூபாய் 70 காசுகளில் இருந்து 10 ரூபாய் 15 காசுகளாக உயர்ந்துள்ளது. புதிய மின் இணைப்பு பெறுவோருக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. குடிசை மற்றும் குறு நிறுவன மின்கட்டணம் 500 கிலோ வாட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு 6 ரூபாய் 95 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.