டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பு திருவள்ளூர்: நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், கூட்டணி அமைப்பதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் குறித்து திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட அமமுக நிர்வாகிகளுடன் தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், "வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தான் வேட்பாளராக போட்டியிடுவதற்கான எண்ணம் இல்லை. அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டது ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டது. அவை மகிழ்ச்சியான விஷயம் எனவும் கூறினார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழாவுக்கு மாணவர்கள் அவசியமாக வரவேண்டும் என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சொல்லியதற்கு எந்தவித தவறும் இல்லை. அதிமுகவில் பிரிந்துள்ள அணிகள் ஓரணியாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய கருத்தாக உள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் எந்த காலத்திலும் அமமுக கூட்டணி அமைக்காது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்த முடியாது என ஒன்றிய அரசு கூறியதற்கு அவர்கள் தயாராக இல்லை என்பதை காட்டுகிறது. கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களை கண்டறிய காவல்துறை முயற்சி மேற்கொண்டு வருவது வெற்றி பெற வேண்டும்” எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: தொடரும் அவலம்.. கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு..!