திருச்சி: சத்திரம் பகுதியில் உள்ள இந்திரா காந்தி மகளிர் கல்லூரியில், மகாத்மா காந்தி சிலை திறப்பு விழா நடந்தது. சிலையைத் திறந்து வைத்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது, "உலகத்தில் எங்கு சென்றாலும், தேசியம் தான் நம்மை முன்னெடுத்துச் செல்கிறது. இன்று, இந்தியாவின் வளர்ச்சியைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சியால், டிஜிட்டல் பொருளாதாரத்தில் அதிகமான வளர்ச்சியடைந்திருப்பது இந்தியா தான்.
நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும், அந்த அனுபவம் கிடைக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். டிஜிட்டல் தொழில்நுட்பம், பணப் பரிமாற்றத்துக்கு மட்டுமின்றி, கரோனா காலகட்டத்தில், மருத்துவத் துறையில் பெரிதும் பயன்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகளில் அந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், நாட்டின் முன்னேற்றத்துக்கான எத்தனையோ திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் பலதரப்பட்ட பாகுபாடுகள் இருந்தாலும், அனைத்து தரப்பிலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக ‘டிஜிட்டல் பப்ளிக் இன்ப்ராஸ்ட்ரக்சர்’ என்ற தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டது. நல்ல முன்னேற்றமடைந்த நாடுகளைப்போல், இந்தியாவும் 2047-க்குள் அந்த நிலையை அடைய முடியும். தற்போது, அந்த நம்பிக்கை வருவதற்கு காரணம், கடந்த 10 ஆண்டுகளில் பல உதாரணங்களை எடுத்துச் சொல்லலாம்.