ஈரோடு:ஈரோட்டில் திருமகன் ஈவெரா சாலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தேர்தல் ஆணையம் மோடியின் கொத்தடிமையாக, கைப்பாவையாக செயல்படுகிறது என்றார்.
மேலும், “கோவையில் அண்ணாமலை வேட்புமனு தாக்கல் செய்யும்போது பல தவறுகள் செய்துள்ளார். கேட்ட விவரங்களை முழுமையாக கொடுக்கவில்லை. எந்த தொகுதியில் வாக்காளராக இருக்கிறார் என்று வேட்புமனுவில் விவரம் தாக்கல் செய்யவில்லை. இதற்கு அனைத்து வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் அதிகாரிடம் புகார் தெரிவித்தனர்.
அப்போது, டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் இருந்து செல்போன் மூலம் தகவல் வந்ததால், வேட்புமனு ஏற்றுக் கொள்வதாக கோவை தேர்தல் அலுவலர் தெரிவித்தார்” என்றார். அதனைத் தொடர்ந்து பேசியவர், “தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளை ஏற்பதோடு மட்டுமல்லாமல், சின்னங்களை உடனே தருகிறது. திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள், மதிமுகவிற்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை.
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது பல மணி நேரம் காக்க வைக்கப்பட்டுள்ளனர். வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனுவை பத்து மணிநேரம் காலதாமதத்திற்கு பிறகு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மோடி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் கூடுதல் சம்பளம் வழங்குவதாக தேர்தல் ஆணையத்தின் மூலம் அறிவித்துள்ளது. இப்படி அறிவிக்கக் கூடாது என்ற நிலையில், இப்படி அறிவிப்பது அயோக்கியத்தனம். தேர்தல் விதிமீறல்கள் தெரியாத பிரதமர் இருப்பது துர்திஷ்டமான விஷயம். இது அப்பட்டமான விதிமுறை மீறல்.