சென்னை: சென்னை குன்றத்தூரைச் சேர்ந்தவர் அசாருதீன் (35). இவர் குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை எதிரில் மொத்தமாக மருந்துகள் விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறார். சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனைக்கும் இவர் மருந்துகள் விநியோகம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
மருந்துகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் அசாருதீன், ஒரு மருந்தின் விலை தோராயமாக 100 ரூபாய்க்கு விற்க வேண்டும் என்றால், அதன் சந்தை மதிப்பைக் காட்டிலும் குறைந்த லாபத்திற்கு மருந்துகளை விற்பனை செய்து லாபம் பார்த்து வந்துள்ளார்.
மேலும், குறைந்த விலைக்கு மருந்துகள் விற்பதால் இவரிடம் அதிக மருத்துவமனைகள் கொள்முதல் செய்து நல்ல லாபத்துடன் தொழில் இயங்கி வந்துள்ளது.
சதி திட்டம்:இந்நிலையில், இவரது தொழில் வளர்ச்சி பிடிக்காத பிரபல மருந்துவமனையின் மருந்தகப் பிரிவு தலைமை பொறுப்பில் இருக்கும் ஊழியரான இம்ரான் என்பவர், சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் கருத்தரிப்பு மையத்தில் பணிபுரியும் சதீஷ் என்பவருடன் சேர்ந்து, அசாருதீனை மிரட்டி தொழில் நடத்தவிடாமல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
மேலும், அசாருதீனை மிரட்டி விரட்டியடித்து விட்டால் நாம் இந்த தொழிலை எடுத்துச் செய்யலாம் என ஆசைப்பட்டுள்ளனர். இந்நிலையில், இருவரும் சேர்ந்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர் யஸ்வந்த் என்பவரை அணுகி, இந்த திட்டம் குறித்து கூறி, தொழில் தொடங்கினால் உங்களையும் பார்ட்னராக சேர்த்துக் கொள்வோம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
வழக்கறிஞரும் அதிக பணம் கிடைக்கும் என ஆசைப்பட்டு அவரிடம் வழக்கிற்கு வரும் கொலை குற்றவாளிகளான கார்மேகம், அருண்குமார் என்பவர்களிடம் அசாருதீனை கண்காணிக்க சொல்லியிருக்கிறார்.
'நாங்கள் போலீஸ்':அவர்கள் கடந்த ஜூன் 22ஆம் தேதி குன்றத்தூர் அருகே சங்கர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வைத்து அசாருதீன் வீட்டிற்குச் செல்லும் போது போலீஸ் எனக் கூறி துப்பாக்கி முனையில் காரில் கடத்தியுள்ளனர். பின்னர், அசாருதீனை கடத்திச் சென்று அருகில் உள்ள சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று துப்பாக்கி முனையில் நாங்கள் போலீஸ் என மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அதற்கு பயந்து போனவர் 8 லட்சம் ரூபாயை அவர்களிடம் கொடுத்துள்ளார்.
அவர்களிடம் இருந்து உயிர் பிழைத்து வந்த அசாரூதீனை மீண்டும் பணம் கேட்டு அந்த போலி போலீஸ் கும்பல் மிரட்டியுள்ளது. இதனையடுத்து, சங்கர் நகர் காவல் நிலையத்தில் அசாருதீன் புகாரளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சங்கர் நகர் போலீசார், ஆய்வாளர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைத்து அவர்களை தேடி வந்த நிலையில், அவர்களை பணம் வாங்க வரவழைத்து கூண்டோடு 9 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார், துப்பாக்கி, வாக்கிடாக்கி, செல்போன் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கைதான பம்மலைச் சேர்ந்த வழக்கறிஞர் யஸ்வந்த (33) உட்பட ரபீக் (40), பல்லாவரத்தைச் சேர்ந்த இம்ரான் (27), வேணுகோபால் ராவ் (27), பம்மலைச் சேர்ந்த சதீஷ் (29), குன்றத்தூரைச் சேர்ந்த ஆண்டனி (36), அருண் (40), பெரும்பாக்கத்தைச் சேர்ந்த கார்மேகம் (38), அருண் குமார் (30) ஆகிய 9 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:மனைவிக்கு உடம்பு சரியில்லை'.. கலங்கடிக்கும் திருடனின் கடிதம்.. தூத்துக்குடியில் வினோத கொள்ளை!