நீலகிரி: கோடை சீசன் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, உதகையிலிருந்து கோவை மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாகவும், மேட்டுப்பாளையம், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து உதகை வரும் வாகனங்கள் குன்னூர் வழியாகவும் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், அத்தியாவசியப் பொருட்களான பால், பெட்ரோலியம், சமையல் எரிவாயு வாகனங்கள் தவிர, மற்ற அனைத்து கனரக வாகனங்களும் இன்று முதல் வருகிற 31ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை உதகை நகருக்குள் வர அனுமதி இல்லை.
மேலும், கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் உதகை ஆவின் நிறுவனத்தில் வாகனங்களை நிறுத்தி, அங்கிருந்து சுற்றுலாப் பேருந்துகள் மூலம் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், உதகை HPF எமரால்ட் ஹைட்ஸ் மகளிர் கல்லூரி அருகே வாகனங்களை நிறுத்தி, அங்கிருந்து சுற்றுலாப் பேருந்துகள் மூலம் உதகை நகர் மட்டுமின்றி, சுற்றுலாத் தலங்களுக்கும் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.