சென்னை: தி.நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி சீதை பதிப்பகத்தின் 32 நூல்கள் அறிமுக விழா நடைபெற்றது. இதில் திமுக துணை பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கலந்து கொண்டு நூலினை அறிமுகம் செய்து வெளியீட தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா கோவி.செழியன் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, விழா மேடையில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, "கருணாநிதியே ஒரு தமிழ், அவருக்கு தொண்டு செய்த உங்களுக்கு சாவில்லை, இன்னும் நூறாண்டுகள் கழித்து ஒரு மாணவன் கருணாநிதியை ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்த புத்தகத்தை நாடும் பொழுது புத்தகம் சிறிதாக இருக்கலாம். ஆனால், அதில் இருக்கக்கூடிய கருத்துக்கள் அதிகம்.
எதுவரை ஏற்றத்தாழ்வு இருக்கிறதோ அதுவரை திராவிடம் இருக்கும். எதிர்க்கட்சிகள் பிரச்னை செய்தால் பெரியார் வழி, பிரச்னை இல்லை என்றால் அண்ணா வழி. ஆட்சியில் இருந்தால் அண்ணா வழி, ஆட்சியில் இல்லை என்றால் பெரியார் வழி என்று இருந்தவர் கருணாநிதி.
பாஜக இன்றைக்கு Indian evidence act பெயரையே மாற்றிவிட்டார்கள், இந்தியாவை பாரத் என்கிறார்கள், அனைத்தின் பெயரையும் மாற்றிவிட்டார்கள். அவர்களால் மாற்ற முடியாத ஒரு இடம் தமிழ்நாடு, தமிழ், தமிழ்நாடு முதலமைச்சருக்கு பின்னால் இருக்கும் தொண்டர்கள். அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள இறையாண்மையை, மதச்சார்பின்மையை, ஜனநாயகத்தைக் காப்பாற்றியவர்.